நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

தவறான கருத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள்

Posted On: 01 AUG 2017 4:40PM by PIB Chennai

நுகர்வோர் நலத்துறை தவறான கருத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களுக்கு எதிரான புகார்கள் தெரிவிப்பதற்கு காமா (GAMA) என்ற பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  நுகர்வோர் இத்தகைய விளம்பரங்கள் குறித்து இதன்மூலம் புகார் தெரிவிக்கலாம்.  2015 மார்ச் முதல் 4,438 புகார்கள் இந்த வலைதளத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன. இந்தப் புகார்களை இந்திய விளம்பரத் தரங்கள் சபை (ASCI) விசாரிக்கிறது. நுகர்வோர் நலத்துறைக்கும் இந்திய விளம்பரத் தரங்கள் சபைக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும்.  புகார்கள் உண்மையானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டால், ASCI இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் / முகமையுடன் தொடர்புகொண்டு அந்த விளம்பரத்தை மாற்றியமைக்கவோ, அல்லது முற்றிலும் அகற்றிவிடவோ கோரும். இந்தக் கோரிக்கையை மீறும் நிறுவனங்கள் தொடர்பாக ASCI புகாரை மேற்கொண்ட நடவடிக்கைக்காக கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பிவைக்கும்.

     2015 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ஆராய்ந்த உணவு, நுகர்வோர் நலன், பொதுவிநியோகம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, தவறான கருத்தை தரும் விளம்பரங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கையை பரிந்துரை செய்துள்ளது.  மேலும் இந்த விளம்பரங்களை வெளியிடும் பிரபலங்கள் மீது பொறுப்பை நிர்ணயிக்கவும் மசோதா வகை செய்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

     இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு சி ஆர் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.  



(Release ID: 1499590) Visitor Counter : 135


Read this release in: English