நிதி அமைச்சகம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கணக்கில் தெரிவிக்காத வருமானத்தை பறிமுதல் செய்தல்

Posted On: 01 AUG 2017 7:08PM by PIB Chennai

போலி இந்திய நோட்டுக்களை பயன்படுத்தி பயங்கரவாதத்துக்கு  நிதியுதவி வழங்குவது, இத்தகைய நிதியை வேவுபார்த்தல், ஆயுதக்கடத்தல், போதை மருந்து கடத்தல், கருப்புப் பணத்தை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது ஆகியவற்றை தடுப்பதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு உயர் மதிப்பு உள்ள ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை 2016 நவம்பர் 8 ஆம் தேதி பிறப்பித்தது.  

     இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் இல்லை. எனினும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறை தொள்ளாயிரம் குழுவினரிடையே தேடுதல் நடத்தியது. 2016 நவம்பர் முதல் 2017 மார்ச் வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில் ரூ.900 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.  ரூ. 7,961 கோடி வரை கணக்கில் காட்டாத வருமானம் இருப்பது தொடர்புடையவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.  இதேகாலத்தில் 8,239 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு ரூ. 6,745 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டு பிடிக்கப்பட்டது.  அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுக் கழகம் ஆகியவை மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமார் 400 பேர் மேற்கொண்ட சட்டவிரோதமான நிதி தவறுகள் கவனத்திற்கு வந்தன.

     மேலும், இந்த நிதியாண்டில் வருமான வரித்துறை 102 குழுவினரிடம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு ரூ. 103 கோடி அளவுக்கு சொத்துக்களை பறிமுதல் செய்தது.   தேடுதல் நடத்தப்பட்ட இடங்களின் சொந்தக்காரர்கள் ரூ. 2,670 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் பெற்றது வெளிவந்தது.  அதேகாலகட்டத்தில் 202 வழக்குகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கணக்கில் காட்டப்படாத ரூ. 150 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

     இந்தத்துறை 2017 ஜனவரி 31 அன்று தூய்மை பண இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தின் நோக்கம் நியாயமான, வெளிப்படையான, தனிநபரிடம் தலையிடாத வரி நிர்வாகத்தின் மூலம் வரியை முழுமையாக செலுத்தும் சமுதாயத்தை உருவாக்குதல், மற்றும் இதன்மூலம் ஒவ்வொரு இந்தியனும் வரிகளை செலுத்துவதில் பெருமை அடையவேண்டும் என்பதாகும்.   இந்த நடவடிக்கையின் விரிவான விளைவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. தங்களது வரி செலுத்தும் நிலையுடன் ஒத்துப்போகாத அளவு ரொக்கப் பரிவர்த்தனை செய்த சுமார் 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மின்னஞ்சல் / குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது.   (ii) 9.27 லட்சத்திற்கும் கூடுதலான தகவல்கள் மூலம் ரூ. 2.89 லட்சம் கோடி ரொக்க செலுத்துகைகள் தொடர்பான 13.33 லட்சம் கணக்குகள் வெளிப்பட்டன. (iii) உயர்நிலை தகவல் பகுப்பாய்வு கருவிகள் மூலம் மேலும் 5.56 லட்சம் புதிய வழக்குகள் அடையாளம் காணப்பட்டன. முன்னதாக ஓரளவே பதிலும் அல்லது பதிலில்லா நிலையும் கொண்ட ஒரு லட்சம் வழக்குகள் இவற்றில் அடங்கும்.  மேலும், சுமார் 200 உயர் எச்சரிக்கை நபர்கள் குழு அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் தகவல்களை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.



(Release ID: 1499587) Visitor Counter : 252


Read this release in: English