விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் விளைபொருள் சந்தைக்குழு

Posted On: 01 AUG 2017 5:23PM by PIB Chennai

2017 ஆம் ஆண்டு வேளாண் உற்பத்தி பொருள் மற்றும் கால்நடை விற்பனை மேம்பாடு மற்றும் வசதி செய்துதருதல் சட்டத்துக்கான மாதிரி வரைவை வேளாண் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.  இந்த வரைவின்படி, முற்போக்கான வேளாண் சந்தை சீர்திருத்தங்களுக்கு வழிசெய்யப்பட்டுள்ளது.  இந்தச் சீர்திருத்தங்களில் தனியார் துறையில் சந்தைகளை அமைத்தல், நேரடி சந்தைப்படுத்துதல், விவசாயிகள்-நுகர்வோர் சந்தைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீதான கட்டுப்பாட்டை அகற்றுதல், மின்னணு வர்த்தகம், சந்தை கட்டணத்தை ஒரே முனையில் விதித்தல், மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே வர்த்தக உரிமம் வழங்குதல், கிடங்குகள் / குதிர்கள் / குளிர்பதன சேமிப்பகங்கள் ஆகியவற்றை சந்தை துணை முனையங்களாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தை முனையங்களாகவும் அறிவித்தல் போன்றவை அடங்கும். இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிகப்படியான சந்தை வசதிகள் கிடைத்து அதன்மூலம் அவர்களது விளை பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

      இந்த மாதிரி வரைவுச் சட்டம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மாநில / யூனியன் பிரதேச வேளாண் சந்தைப்படுத்துதல் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் அமைச்சரால்  வெளியிடப்பட்டது.    இந்த வரைவுச் சட்டத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு ஏற்றாற்போல அமைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.

      5.7.2017 அன்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தலைமையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களின் வேளாண் சந்தைப்படுத்துதல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனை திட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்தச் சட்ட வரைவை ஏற்று சட்டமாக  அமல்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளபட்டன. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்களையும் மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதிகபட்ச பயன்களை கிடைக்கச்செய்ய வேண்டும் என மாநில பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

      இந்தத் தகவலை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு பர்ஸோத்தம் ரூபாலா இன்று மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.



(Release ID: 1499209) Visitor Counter : 145


Read this release in: English