பிரதமர் அலுவலகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 75-ம் ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
09 AUG 2017 4:44PM by PIB Chennai
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மக்களவையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், “வெள்ளையனே வெளியேறு” போன்ற இயக்கங்களை நினைவுகூர்வது, நம்மையெல்லாம் ஊக்குவிப்பதாக அமைகிறது என்றார். மேலும், இதுபோன்ற இயக்கங்கள் குறித்த விவரங்களை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமுறையினரிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி போன்ற பல்வேறு மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், புதிய தலைமுறை தலைவர்கள் உருவாகி, அந்த காலி இடத்தை நிரப்பியதுடன், இயக்கத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
சுதந்திரப் போராட்டம் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்ததை குறிப்பிட்ட பிரதமர், 1857-ஆம் ஆண்டு முதலே பல்வேறு தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் உருவானதையும் நினைவுகூர்ந்தார். 1942-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், உறுதியான இயக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தியை குறிப்பிட்ட பிரதமர், “செய் அல்லது செத்து மடி” என்ற மகாத்மா காந்தியின் எழுச்சியூட்டும் அழைப்பை ஏற்று, அனைத்து தரப்பு மக்களும் இணைந்ததாக தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை ஒவ்வொருவரும் இந்த உணர்வுடனேயே ஊக்குவிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். ஒட்டுமொத்த நாடும், சுதந்திரம் என்ற பொதுவான உறுதியை பகிர்ந்துகொண்டதன் மூலம், சுதந்திரம் என்ற இலக்கை 5 ஆண்டுகளில் அடைய முடிந்ததாக கூறினார்.
அந்த நேரத்தில் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்க எழுத்தாளர் ராம்விரிக்ஷா பேணிபூரி மற்றும் கவிஞர் சோஹன்லால் திவிவேதி ஆகியோரின் கருத்துகளை பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது, ஊழல், வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு மாற்றத்துக்கு சாதகமான நடவடிக்கை மற்றும் பொதுவான உறுதி ஆகியவையே தேவை என்று அவர் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் அளித்த பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், இன்றும் கூட, நமது பொதுவான இலக்குகளை நிறைவேற்ற பெண்களால் வலுவான பலத்தை அளிக்க முடியும் என்றார்.
நமது உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்துப் பேசிய பிரதமர், நமது உரிமைகளை நாம் முழுமையாக தெரிந்துவைத்துள்ள நிலையில், நமது கடமைகளையும் மறந்துவிடக் கூடாது என்றார். இவையும் நமது வாழ்க்கை முறையின் அங்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார்.
காலனி ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கி, இந்தியாவின் சுதந்திரத்தின் மூலம் முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
கடந்த 1942-ஆம் ஆண்டில் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, இந்தியாவுக்கு சாதகமான சர்வதேச சூழ்நிலைகள் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். இன்றும் கூட, இந்தியாவுக்கு சாதகமாகவே சர்வதேச சூழ்நிலைகள் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 1857-ஆம் ஆண்டு முதல் 1942-ஆம் ஆண்டுவரை சுதந்திரத்துக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், 1942-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டுவரையான காலம் மாற்றத்தை உருவாக்கி, இலக்கை நிறைவேற்றியதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களது வேறுபாடுகளை மறந்து, அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுக்குள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்கும் பொதுவான முயற்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 2022-ம் ஆண்டில், நாடு சுதந்திரம் பெற்றதன் 75-ம் ஆண்டு நிறைவடைவதையும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1942-ஆம் ஆண்டில், “செய் அல்லது செத்து மடி” என்ற எழுச்சியூட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று “ செய்வோம் செய்து கொண்டே இருப்போம்” (Karenge aur Karke Rahenge) என்ற அழைப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகள், நமது உறுதிமாழியை நிறைவேற்றும் (Sankalp se Siddhi) காலமாக இருக்க வேண்டும். இந்தத் உறுதிமொழி, நம்மை இலக்கை நிறைவேற்ற வழிநடத்திச் செல்லும் என்றும் பிரதமர் கூறினார்.
ஊழலை ஒழித்தல், ஏழைகளுக்கு அவர்களது உரிமைகளை வழங்குதல், இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு முடிவுகட்டுதல், பெண்கள் மேம்பாட்டுக்கான தடைகளை அகற்றுதல், கல்வியறிவின்மையைப் போக்குதல் ஆகியவற்றுக்காக கீழ்க்காணும் உறுதிமொழிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, தனது உரையை நிறைவுசெய்தார்:
· நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேசத்தில் இருந்து ஊழலை விரட்டுவோம். தொடர்ந்து விரட்டுவோம்.
· நாம் அனைவரும் ஒன்றிணைந்து வறுமையை ஒழிக்க ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்போம். அளித்துக் கொண்டே இருப்போம்
· நாம் அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஈட்டித் தரும் வகையில் திறன் மேம்பாட்டினை அளிப்போம். அளித்துக் கொண்டே இருப்போம்.
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊட்டச் சத்து குறைபாட்டை இந்த நாட்டிவிட்டே ஒழிப்போம். ஒழித்துக் கொண்டே இருப்போம்
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து மகளிர் மேம்பாட்டிற்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் ஒழிப்போம். ஒழித்துக் கொண்டே இருப்போம்.
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து எழுத்தறிவின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வைத்துக் கொண்டே இருப்போம்
****
(रिलीज़ आईडी: 1499010)
आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English