சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய கடலோர மேலாண்மை மையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
Posted On:
14 JUL 2017 5:31PM by PIB Chennai
சுற்றுச் சூழல், வனப்பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சகம் புதிய தேசிய கடலோர இயக்கம் ஒன்றைத் தொடங்குகிறது. இந்த குறிக்கோளின் அடிப்படையில் தேசிய நீடித்த கடலோர மேலாண்மை மையத்தை (என்.சி.எஸ்.சி.எம்.) சுற்றுச்சுழல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் சென்னையில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மையத்தின் புதிய கட்டிடத்தையும் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் பேசுகையில், என்.சி.எஸ்.சி.எம். மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் நேரடியாக கொள்கை முடிவுகளாக்கப்பட்டு, கடலோரச் சமுதாய மக்களுக்கும் பிற துறைசார் வல்லுநர்களுக்கும் திறன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றார்.
சென்னைக்குப் புறப்படும் நேரத்தில் வெளியிட்ட தமது அறிக்கையில், பல்வேறு ஆராய்ச்சி-வளர்ச்சி, மற்றும் கொள்கைசார் புதிய தொடக்கங்களால் கடலோர மாநிலங்களில் நீடித்த தரமான வாழ்வாதாரத்துக்கும், கடலோரச் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கும் வழிகாண்பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். என்.சி.எஸ்.சி.எம். மையத்தில் ஆறு ஆராய்ச்சிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், அவை புவி-வானியல் சார்ந்த அறிவியல்களை ஒன்றிணைத்து, பாதுகாப்பு, மாசுபடுதல், பருவநிலை மாற்றம், நாட்டின் முதன்மை நிலம் மற்றும் தீவுகள் இரண்டிலுமுள்ள சமுதாய இணைப்பு ஆகியவற்றில் தீர்க்கமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார். என்.சி.எஸ்.சி.எம். மையத்தின் மைய வலிமையானது கடலோர சமுதாய மக்களின் நலவாழ்வுக்கும், அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நீடித்த வளர்ச்சிக்கும் அடித்தளமிடும் பல்துறைசார் பன்முக ஆராய்ச்சித் தன்மையே என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
என்.சி.எஸ்.சி.எம். மையத்தை நிறுவுவதன் பின்னணியில் உள்ள நோக்கங்களை விவரிக்கையில்… அமைச்சர் கூறியதாவது:
பரம்பரை பரம்பரையாகக் கடலோரப் பகுதிகளிலும் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்ற சமுதாய மக்களின் நன்மைக்காகவும், மேம்பட்ட வாழ்வுக்காகவும் நாட்டில் கடலோர மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் ஒருங்கிணைந்த நீடித்த மேலாண்மைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், துறைசார் வல்லுநர்கள்-ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடலோர மேலாண்மைத் திறனை வலுப்படுத்துதல்,
ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கும் தொடர்புள்ள பிற துறைசார் வல்லுநர்கள்-ஆர்வலர்களுக்கும் கொள்கை சார்ந்த அறிவியல் விஷயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல், கடலோர மண்டலங்கள் பற்றிய புரிதல், கடலோரம் சார்;ந்த வளர்ச்சி முறைகள், கடலோர மற்றும் கடல்பகுதிகள் நிர்வாகத்தில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு உலகத்தரமான நிறுவனமாக உயர்த்த முயலுதல்…எனப் பட்டியலிட்டு அமைச்சர் விவரித்தார்.
என்.சி.எஸ்.சி.எம். மையமானது பிற அமைச்சகங்களுடனும், மாநில- யூனியன் பிரதேச அரசுகளுடனும் இணைந்து, கடற்கரையோரங்களில் பருவநிலை மாற்றம், அதன்தொடர்பாக நேரும் சூழலியல், உயிர்கள், வாழ்வாதாரம் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக அறிவியல் வரைபடமாக்கும் முயற்சியில் ஈடுபடும்.
சேதாரம் அடிப்படையிலான சூழல் மற்றும் தகவமைவு மேலாண்மைத் திட்டமிடல் போன்றவற்றைக் கீழ்க்காணும் துறைகளில் இம்மையம் உருவாக்கும்.
1. அனைத்துக் கடலோர வளர்ச்சித்திட்டங்களிலும் பருவநிலை மாற்ற உணர்வையும் தயார்நிலையையும் முதன்மைப்படுத்துதல்
2. கடலோர இயற்கை ஆபத்துகளாலும்; கடல்நீர்மட்ட உயர்வாலும் ஏறபடும்; அச்சுறுத்தலைக் கணக்கில் கொண்டு வளர்ச்சிக்கு வழிகோலுதல். மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கடலோர சமுதாய மக்களுக்கு மறுவாழ்வளித்தல், நகர்ப்புறங்களிலும், ஊரகப்பகுதிகளிலும் அவர்களின் குடியேற்றத்துக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், கடலோர நிலப் பரப்புகளைப் பராமரித்தல், பாதுகாத்தல், கடலோரத் தனித் தன்மையையும் கடல்பகுதியையும் பேணி அதன் அமைதியை நிலைநாட்டும் வகையில் - நீல கார்பன் சூழல்திட்டம் மூலம் மாங்குரோவ் பகுதியைப்பாதுகாத்தல், கடல்புல்வெளியை மேம்படுத்துதல், உப்புசார் சதுப்புமண் சூழலை மேம்படுத்தல் போன்றவற்றால் துறைகள் சார்ந்தும், சமுதாயம் சார்ந்தும் நிறுவனத் திறன் மேம்பாட்டை அடையச்செய்தல்
மேற்கண்டவாறு விரிவாக எடுத்துரைத்த டாக்டர் ஹர்ஷவர்த்தன், இந்த மையத்தை உலகத் தரத்திலான ஒரு நிறுவனமாக மாற்றத் திட்ட மிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு உருவாக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்திட்டங்களும், கொள்கை முடிவுகளும் நமது நாட்டுக்கு மட்டுமல்ல, சார்க் நாடுகள் அனைத்துக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
*******
(Release ID: 1498998)
Visitor Counter : 230