குடியரசுத் தலைவர் செயலகம்

பாராளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவருக்கு வழியனுப்பு விழா

Posted On: 23 JUL 2017 7:10PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூலை 23,2017) நடந்த வழியனுப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக 37 ஆண்டுகள் தான் பணிபுரிந்துள்ளதாக கூறினார். நாடாளுமன்றத்தின் ட்ரசரி பெஞ்சிலும் எதிர்கட்சிகளின் வரிசையிலும் அமர்ந்து மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் பெரும் ஆளுமைகளின் உரையைக் கேட்டு, வாழும் இந்த நிறுவனத்தின் ஆன்மாவோடு கலந்து விட்டது போல் உணர்ந்தேன் என்று அவர் கூறினார். விவாதம், கலந்துரையாடல் மற்றும் அதிருப்தியைப் பதிவு செய்வதின் உண்மையான மதிப்பை நான் புரிந்துகொண்டேன்; நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறு, அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியை எந்த அளவிற்கு வருத்தப்படுத்தும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்; ஏனெனில் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் எழுப்புவதற்கான வாய்ப்பை இது மறுக்கிறது.

சட்டமியற்றுதல் குறித்த விவாதங்களுக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற நேரம் குறைந்துகொண்டே வருவது துரதிருஷ்டவசமான ஒன்று. நிர்வாகம் அதிக அளவிற்கு சிக்கலானதாக மாறிவரும் சூழலில், சட்டமியற்றுதலுக்குமுன் ஆய்வும் போதுமான விவாதங்களும் நடைபெற வேண்டும். கமிட்டிகளுக்குள் நடக்கும் ஆய்வுகள், அவையில் நடக்கும் வெளிப்படையான விவாதத்திற்கு என்றைக்கும் மாற்றாக முடியாது. தனது சட்டமியற்றும் பாத்திரத்தில் நாடாளுமன்றம் தவறினாலோ அல்லது விவாதமின்றி சட்டத்தை இயற்றினாலோ, அதன்மீது இந்த மாபெரும் தேசம் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்கும் செயலாகும் அது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவைவரியும் மற்றும் ஜூலை ஒன்று முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதும் கூட்டாட்சி முறைக்கான பளிச்சிடும் எடுத்துக்காட்டாகும் என்று கூறிய அவர்,  இந்திய நாடாளுமன்றத்தின் முதிர்ச்சியை மிகப்பெருமளவில் அது வெளிப்படுத்துகிறது என்றார்.

ஜூலை 2012இல் குடியரசின் பதிமூன்றாவது தலைவராக தான் அறிவிக்கப்பட்டபோது, மக்களவையில் தனது உறுப்பினர் பதவி முடிவுற்றதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தனது முப்பதியேழு ஆண்டு வாழ்க்கை முடிவுற்றாலும், அரசியலமைப்பின்படி, இந்தக் குடியரசின் தலைவர் என்ற முறையில், இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து உறுதியான உறவுடனும்  சொல்லப்போனால் அதன் ஒருங்கிணைந்த அங்கமாகவே மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஐந்து ஆண்டுகளில் அரசியலமைப்பின் பாதுகாவலனாக செயல்படுவதே  அவரது முக்கியமான பொறுப்பாக இருந்தது என்றார் அவர். உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது கூறியதுபோல, சொற்களால் அன்றி, ஆன்ம சுத்தியுடன் இந்த அரசியலமைப்பை பேணவும், பாதுகாக்கவும் தற்காக்கவும் அவர் முயன்றார்.  இந்தப் பணியில், ஒவ்வொரு தருணத்திலும் பிரதமர் திரு. மோடியின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் அவருக்குப் பேருதவியாய் இருந்தது. மோடி அவர்கள், உணர்வுடனும் ஆற்றலுடனும் இந்த தேசத்தில் பெருமாற்றத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார் என்றும், அவர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் அவரது அன்பான, மரியாதை செறிந்த நடத்தைகளின் நினவுகளை தான் எடுத்துச் செல்வதாகவும் திரு. பிரணாப் முகர்ஜி கூறினார்.

குடியரசுத்தலைவரின் அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக, நாடாளுமன்றத்துடனான அவரது உறவும் முடிவுற்றதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய நாடாளுமன்றத்தின் அங்கமாக அவர் இனி இருக்க முடியாது; இந்த நிறுவனத்தின் எளிமையானதொரு சேவகனாக இந்த மாபெரும் தேசத்தின் மக்களுக்கு சேவை செய்தேன் என்ற நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தான் விடைபெறுவதாக திரு. பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார்.



(Release ID: 1498962) Visitor Counter : 59


Read this release in: English