குடியரசுத் தலைவர் செயலகம்

தில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜூலை 23, 2017 அன்று நடந்த வழியனுப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை

Posted On: 23 JUL 2017 7:14PM by PIB Chennai
  1. மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,  இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது தலைவராக என் பதவிக் காலம் முடிவுறுவதை ஒட்டி இந்த வழியனுப்பு விழாவை ஏற்பாடு செய்த மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் என் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  2. நான் இந்த நாடாளுமன்றத்தின் உருவாக்கம் என்று கூறிக் கொள்ள விழைகிறேன். பரந்த அரசியல் பார்வை மற்றும் ஆளுமையால் அது வடிவம் பெற்றது. பழைய நினைவுகளில் ஆழ்ந்து கடந்த காலத்திற்கு நான் செல்வதை தயவு செய்து அனுமதியுங்கள். இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.  உயர்ந்த குறிக்கோள் மற்றும் துணிவை சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் வகையில், இந்தியக் குடிமக்களாகிய நாம் நம்மை, குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு இறையாண்மை மிக்க ஜனநாயக குடியரசிடம் ஒப்புக் கொடுத்தோம். குடிமக்கள் அனைவருக்குமிடையே, சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் மற்றும் தேசத்தில் ஒருமைப்பாட்டை மேம்படுத்த நாம் உறுதிகொண்டோம். இந்த இலட்சியங்களே, நவீன இந்திய அரசின் வழிகாட்டும் விண்மீன்கள். 395 விதிகளும் 12 அட்டவணைகளும் கொண்ட இந்திய அரசியலமைப்பு, நிர்வாகம் செய்வதற்கான வெறும் சட்ட ஆவணம் அல்ல; இந்த தேசத்தின் சமூக, பொருளாதார மாற்றத்திற்கான மாக்ன கார்ட்டா. 100 கோடிக்கும் மேலான மக்களின் நம்பிக்கைகளையும் விழைவுகளையும் அது பிரதிபலிக்கிறது.
  3. 68 ஆண்டுகளுக்கு முன்னர், முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு,  மக்களின்  இறையாண்மை நிறைந்த விருப்பத்தை பிரதிபலித்த இந்திய நாடாளுமன்றம் அதன் பயணத்தை தொடங்கியது. இரண்டு அவைகளும் அமைக்கப்பட்டன.  முதல் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த அமர்வில் அவர் உரையாற்ற, பாராளுமன்ற நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டது.
  4. மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, 48 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் புனிதமான இடத்தின் தலைவாசலில் நான் காலடி வைத்தபோது எனக்கு வயது 34 தான். ஜூலை 1969இல் நான் மாநிலங்களவையின் உறுப்பினராக இந்த நாடாளுமன்றத்திற்கு வந்தேன். மேற்கு வங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய ஆறு உறுப்பினர்களில் ஒருவனாக. எனது தேர்தல் ஜூலை 4இல் நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதல் அமர்வு ஜூலை 22, 1969இல் தொடங்கியது.
  5. அன்று தொடங்கி, 37 ஆண்டுகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினராக நான் பணிபுரிந்துள்ளேன். இதில் 5 முறை மாநிலங்களவையின் உறுப்பினராக, நான்குமுறை மேற்கு வங்கத்தில் இருந்தும்  ஒருமுறை குஜராத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது நீண்ட பணிக்காலம், பயனுள்ள தகவல் சேகரிப்பது மற்றும் கற்பதுமாகவே இருந்தது. நான் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்களால் அது நிரம்பியிருந்தது; அவர்களில் பெரும்பாலோர் அற்புதமான பேச்சாளர்கள்: எம்.சி.சக்லா, அஜித் பிரசாத் ஜெயின், ஜெய்ராம்தாஸ் தவுலத்ராம், பூபேஷ் குப்தா, ஜோச்சிம் ஆல்வா, மகாவீர் தியாகி, ராஜ் நாராயண், பாய் மகாவீர், லோக்நாத் மிஸ்ரா, சிட்ட பாசு போன்ற பலர். உண்மையில் பூபேஷ் குப்தா மாநிலங்களவையின் ஜாம்பவானாக இருந்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் மகனும் மகளுமான தயாபாய் படேலும், மணிபென் படேலும் நாடாளுமன்றத்தில் சுதந்திரா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் நான் இருந்த ஆண்டுகளில், திரு. பி.வி.நரசிம்மராவின் விவேகத்தால், திரு. அடல்பிகாரி வாஜ்பாயின் பேச்சால், மது லிமாயி மற்றும் டாக்டர் நாத் பாயின் பூடகமான ஒரு வரி விமர்சனங்களால், பிலு மோடியின் சமத்காரமான நகைச்சுவையால், ஹிரேன் முகர்ஜியின் கவிதைப் பேச்சால், திரு. இந்திரஜித் குப்தாவின் கத்தி போன்ற கூர்மையான பதில்களால், டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைதியான இருப்பால், திரு. அத்வானியின் முதிர்ச்சியான ஆலோசனைகளால், திருமதி சோனியா காந்தியின் உணர்வு மிக்க ஆதரவால் அந்தக் காலக்கட்டம் செழித்தது எனலாம்.
  6. நாடாளுமன்ற உறுப்பினராக, நிச்சயமாக, நான் மறைந்த திருமதி இந்திரா காந்தியால்தான் வழிநடத்தப்பட்டேன். இரும்பையொத்த அவரது உறுதிப்பாடும் சிந்தனைத் தெளிவும், உறுதியான செயல்பாடுகளும் அவரது உயரிய ஆளுமையை உருவாக்கின. மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்ல அவர் என்றும் தயங்கியதில்லை. நெருக்கடி நிலைக்குப் பின்னர் நடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு நாங்கள் இலண்டனுக்கு நவம்பர் 1978இல் சென்றது என் நினைவில் இருக்கிறது. ஆக்ரோஷமான மனநிலையில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் திருமதி இந்திரா காந்தியிடம் கேட்க ஏராளமான கேள்விகளுடன் காத்திருந்தனர். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “இந்த நெருக்கடி நிலையால் நீங்கள் அடைந்த இலாபம் என்ன?”  அந்தப் பத்திரிக்கையாளரை நேருக்கு நேர் பார்த்து, சாதாரணமான குரலில், இந்திரா காந்தி பதிலளித்தார், “அந்த இருபத்தியோரு மாதங்களும் அனைத்துத் தரப்பு இந்திய மக்களையும் முழுமையான அளவிற்கு தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.” பெரும் அமைதியைத் தொடர்ந்து பலத்த சிரிப்பொலி! அதன்பிறகு ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள் கலைந்து போயினர். தவறுகளை ஒப்புக் கொள்ளுதல் மற்றும் அவற்றைச் சரிசெய்தல் என்ற எனது தொடக்கப் பாடத்தையும் அன்று நான் கற்றுக்கொண்டேன். அத்தகையச் சூழல்களில் சுய-நியாயத்தைப் பேசுவதைவிட சுய-திருத்தம் என்பது சரியான தெரிவாக எப்போதும் இருக்கும்.
  7. அந்த நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் உயிர்ப்புள்ள விவாதங்களால், சமூகம் மற்றும் நிதி சார்ந்த சட்டங்கள் குறித்த பளிச்சிடும் ஆழமான விவாதங்களால் எதிரொலிக்கும். நாடாளுமன்றத்தின் ட்ரஷரி பெஞ்சிலும் எதிர்கட்சிகளின் வரிசையிலும் அமர்ந்து மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் பெரும் ஆளுமைகளின் உரையைக் கேட்டு, வாழும் இந்த நிறுவனத்தின் ஆன்மாவோடு கலந்து விட்டது போல் உணர்ந்திருக்கிறேன். விவாதம், கலந்துரையாடல் மற்றும் அதிருப்தியைப் பதிவு செய்வதின் உண்மையான மதிப்பை நான் புரிந்துகொண்டேன்; அவை நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறு, அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியை எந்த அளவிற்கு வருத்தப்படுத்தும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்; ஏனெனில் மக்களின் பிரச்சனைகளை அவர்கள் எழுப்புவதற்கான வாய்ப்பை இது மறுக்கிறது. பண்டிட் ஜவஹர்லால் நேரு கூறியதின் சாரத்தை நான் உள்வாங்கிக் கொண்டேன். “மாற்றம் மற்றும் தொடர்ச்சிக்கு இடையே எப்போதும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம்,  மாற்றம் மற்றும் தொடர்ச்சி என்ற இந்தக் கொள்கைகளை உள்வாங்கியிருக்கிறது.  தொடர்ச்சி என்ற கொள்கைக்கு உட்பட்டு, அவர்கள் விரும்பும் விரைவிற்கு ஏற்றவாறு மாற்றத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது என்பது  இந்த அமைப்பில் இயங்கும், இந்த அவையின் உறுப்பினர்கள் மற்றும் இந்த அமைப்பின் அங்கமாக இருக்கும் ஏராளமான மற்றவர்களைப் பொறுத்தது. தொடர்ச்சி என்பது உடைந்துபோனால், நாம் வேரற்றவர்களாவோம். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும் உடைந்து போகும்”.  ஏழைகளுக்குச் சாதகமான, விவசாயிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்படும்போது நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவைவரியும், ஜூலை ஒன்று முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதும் கூட்டாட்சி முறைக்கான பளிச்சிடும் எடுத்துக்காட்டாகும்.  இந்திய நாடாளுமன்றத்தின் அனுபவ முதிர்ச்சியை மிகப்பெருமளவில் இது வெளிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் அங்கமாக இருப்பது ஒரு தனி அனுபவம். இந்த வாய்ப்பைத் தந்த மாபெரும் தேசத்தின் மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
  8. மாபெரும் இந்தியாவின் எழுச்சியை காணவும், சாட்சியாக இருக்கவும், அதில் பங்கேற்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரியர், திராவிடர், மங்கோலியர் என்ற மூன்று தொன்மையான இனங்களைச் சார்ந்த 130 கோடி மக்கள் வாழும் இந்தியா; ஏழு மதங்களை அவர்கள் பின்பற்றுகிறார்கள், தினசரி வாழ்வில் 122 மொழிகளைப்பேசும் அவர்கள், ஒரு அரசியலமைப்பின் கீழ், ஒரு கொடியின் கீழ், ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் வாழ்கிறார்கள்.
  9. மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாபெரும் நிலப்பரப்பு மற்றும் தீவுகளால் ஆன 3.3 மில்லியன் சதுர கி.மீ பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்த தேசத்தின் எந்த ஒற்றைப் பகுதியும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாமல் இல்லை.  நாட்டின் 543 தொகுதிகளில் இருந்து 543 உறுப்பினர்கள் லோக்சபாவில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 245 உறுப்பினர்கள்  சட்டங்களை உருவாக்குகிறார்கள்; அதிகாரிகளின் உத்தரவுகளை சீராய்ந்து பார்க்கிறார்கள்; மக்களின் நலனைப் பாதுகாக்கும் விஷயங்களில் பொறுப்புடன் இருப்பதை கட்டாயமாக்குகிறார்கள். இந்த 788 குரல்கள் ஒவ்வொன்றும் முக்கியமானது. சட்டமியற்றுதல் குறித்த விவாதங்களுக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற நேரம் குறைந்துகொண்டே வருவது துரதிருஷ்டவசமானது. நிர்வாகம் அதிக அளவிற்கு சிக்கலானதாக மாறிவரும் சூழலில், சட்டமியற்றுதலுக்குமுன் ஆய்வும் போதுமான விவாதங்களும் நடைபெற வேண்டும். கமிட்டிகளுக்குள் நடக்கும் ஆய்வுகள், அவையில் நடக்கும் வெளிப்படையான விவாதத்திற்கு என்றைக்கும் மாற்றாக முடியாது. தனது சட்டமியற்றும் பங்கிலிருந்து நாடாளுமன்றம் தவறினாலோ அல்லது விவாதமின்றி சட்டத்தை இயற்றினாலோ, அதன்மீது இந்த மாபெரும் தேசத்தின் மக்கள்  வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்கும் செயலாகும் அது.
  10. நாடாளுமன்றம் அமர்வில் இல்லாத நேரங்களில் எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ளத் தேவையான சட்டங்களை உருவாக்க, அதிகாரிகளுக்கு அவசரச் சட்டத்தின் மூலம் அசாதாரண அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அத்தகைய அவசரச் சட்டங்கள், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது ஆறுவாரங்களுக்குள் அதன் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  11. அவசரச் சட்ட வழிமுறை என்பது  கட்டாயமான சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என் உறுதியான கருத்து. அதுவும் நிதி சம்பந்தபட்ட விஷயங்களுக்கு அவசரச் சட்டத்தின் உதவியை நாடக்கூடாது. அவையால் விவாதிக்கப்படும் அல்லது அவையிலோ அல்லது அவையால் அமைக்கப்பட்ட குழுவிலோ அறிமுகப்படுத்தப்பட்ட விஷயங்களுக்கு  அவசரச் சட்ட வழியை பயன்படுத்தக் கூடாது.  ஒரு விஷயம் மிகவும் அவசரம் என்று கருதப்பட்டால், அந்தக் குழுவிற்கு சூழ்நிலையை விளக்கவேண்டும். அறிக்கையை  சமர்ப்பிக்க அக்குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும்.
  12. ஜூலை 22, 2012இல் குடியரசின் பதிமூன்றாவது தலைவராக அறிவிக்கப்பட்டபோது, மக்களவையில் எனது உறுப்பினர் பதவி அந்த மாதத்துடன் முடிவுற்றது. நாடாளுமன்றத்தில் எனது முப்பதியேழு ஆண்டு வாழ்க்கை முடிவுற்றாலும், அரசியலமைப்பின்படி, இந்தக் குடியரசின் தலைவர் என்ற முறையில், இந்த அமைப்புடன் தொடர்ந்து உறுதியான உறவுடனும்  சொல்லப்போனால் அதன் ஒருங்கிணைந்த அங்கமாகவே  நான் மாறிவிட்டேன். இந்திய அரசியலமைப்பின் விதி 79ன் படி, “குடியரசிற்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கவேண்டும்.  குடியரசின் தலைவரும் மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இரண்டு அவைகளும் அதில் அடங்கும்.” இந்த ஐந்து ஆண்டுகளில் அரசியலமைப்பின் பாதுகாவலனாக செயல்படுவதே  எனது முக்கியமான பொறுப்பாக இருந்தது. நான் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது கூறியதுபோல, சொற்களால் அன்றி, ஆன்ம சுத்தியுடன் இந்த அரசியலமைப்பைப் பேணவும், பாதுகாக்கவும் தற்காக்கவும் முயன்றேன். இந்தப் பணியில், ஒவ்வொரு தருணத்திலும் பிரதமர் திரு. மோடியின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் பேருதவியாய் இருந்தது. திரு. மோடி, உணர்வுடனும் ஆற்றலுடனும் இந்த தேசத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். எங்களுக்கு இடையிலான நட்பின்,  அன்பான, மரியாதை செறிந்த அவரது நடத்தைகளின் பிரியமான நினவுகளை  என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.
  13. குடியரசின் தலைவராக நான் ஓய்வு பெறுவதன் காரணமாக, நாடாளுமன்றத்துடனான எனது உறவும் முடிவுற்றது. இந்திய நாடாளுமன்றத்தின் அங்கமாக இனி நான் இருக்க முடியாது. இன்று இந்த மகத்தான கட்டிடத்தை விட்டுச் சிறு துயரத்துடனும் ஏராளமான வண்ணமயமான நினைவுகளுடனும் செல்கிறேன்.
  14. அன்பான நண்பர்களே!  நன்றியுணர்வுடனும், இதயத்தில் பிரார்த்தனைகளுடனும் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மக்களின் எளிமையான சேவகனாக,  இந்த அமைப்பின் மூலம் இந்த மாபெரும் தேசத்தின் மக்களுக்கு சேவை செய்தேன் என்ற நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன்.

நன்றி,  ஜெய்ஹிந்த்!



(Release ID: 1498960) Visitor Counter : 61


Read this release in: English