பிரதமர் அலுவலகம்

மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில் இந்திய வானொலியில் இன்று காலை ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 JUL 2017 5:34PM by PIB Chennai
Press Release photo

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மழைக்காலம் என்பது மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் காலமாக அமைந்து விடுகிறது. விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், இயற்கை என அனைத்தும் மழையின் வருகையால் மலர்கின்றன. ஆனால் சில வேளைகளில் இந்த மழை பெருமழையாகும் போது. நீரிடம் தான் எத்தனை பெரிய அழிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. இயற்கை அன்னை தான் நமக்கு உயிர் அளிக்கிறாள், நம்மையெல்லாம் வளர்க்கிறாள், ஆனால் சில வேளைகளில் வெள்ளங்கள், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அவற்றின் கோரமான ரூபம் ஆகியன அதிக அழிவை ஏற்படுத்தி விடுகின்றன. மாறிவரும் பருவச்சக்கரமும் சுற்றுச்சூழல் மாற்றமும், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக பாரதத்தின் சில பாகங்களில் குறிப்பாக, அசாம், வட கிழக்கு, குஜராத், ராஜஸ்தான், வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அதிக மழை காரணமாக இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கு பாதித்த பகுதிகளில் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகப் பரவலான வகையில் நிவாரண நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முடிந்த அளவில், அங்கே அமைச்சரவையைச் சேர்ந்த எனது சகாக்களும் சென்று வருகிறார்கள். மாநில அரசுகளும் தங்கள் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதில் பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். சமூக அமைப்புகளும், கலாச்சார அமைப்புகளும், சேவை புரியும் உணர்வுள்ள குடிமக்களும் கூட, இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் தங்கள் முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், என்.டி.ஆர். எப்., அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணை இராணுவப் படையினர் என, இந்திய அரசு தரப்பில் அனைவரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிவதில் மிகுந்த முனைப்போடு ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுப் போகிறது. விளைச்சல், கால்நடைச் செல்வம், கட்டமைப்பு வசதிகள், சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு அமைப்புகள் என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக நமது விவசாய சகோதரர்களின் விளைச்சலுக்கும், அவர்கள் விளைநிலங்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் நாங்கள் விவசாயிகளின் இழப்பீடு கோரிக்கைத் தீர்வு உடனடியாக நிறைவேற்றப்பட, காப்பீடு நிறுவனங்களுக்கு, குறிப்பாக பயிர் காப்பீடு நிறுவனங்கள் உயிர்ப்போடு செயல்படத் திட்டங்கள் தீட்டியிருக்கிறோம். அதோடு கூட, வெள்ளநிலையை சமாளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி எண்ணான 1078 என்ற முறையும் முழுமையாக இயங்கி வருகிறது. மக்கள் இந்த எண்ணில் தங்கள் கஷ்டங்களைத் தெரிவித்தும் வருகிறார்கள். மழைக்காலம் தொடங்கும் முன்பாக பெரும்பான்மை இடங்களில் பயிற்சிமுறை இயக்கம் செய்து பார்க்கப்பட்டு, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை அணிகள் முடுக்கி விடப்பட்டன. பல இடங்களிலும் பேரிடரில் உதவும் தொண்டர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது குறித்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது, தன்னார்வலர்களைத் தீர்மானிப்பது, ஒரு மக்கள் அமைப்பை உருவாக்கி, இது போன்ற சூழ்நிலைகளில் செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதெல்லாம் வானிலை பற்றி முன்பே கணிக்கப்பட்டு விடுகின்றது, தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது, விண்வெளி விஞ்ஞானம் இதை கணித்துச் சொல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட சரியான கணிப்பு நமக்கு கிடைத்து விடுகிறது. மெல்ல மெல்ல, பருவநிலை கணிப்புக்கு ஏற்றபடி, நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதையும், பேரிடர்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதையும், நாம் நமது இயல்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்கிறேனோ, அப்போதெல்லாம் நம் தேசத்தின் மக்களும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை என்னால் காண முடிகிறது. இந்த முறை சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்திருக்கின்றன; இப்போதும் கூட மக்கள் இந்த சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், எதிர்பார்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த தொலைபேசி அழைப்பைக் கேளுங்களேன்:

வணக்கம், பிரதமர் அவர்களே, நான் குர்காவ்ன், அதாவது குருகிராமிலிருந்து நீத்து கர்க் பேசுகிறேன். நான் உங்கள் பட்டயக் கணக்காளர்கள் தின உரையைக் கேட்டேன், அது என் மனதைத் தொட்டது. சரியாக ஒரு மாதம் முன்பாக, இதே நாளில் தான் சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்டது. ஒரு மாதம் கழிந்த நிலையில், நீங்கள் எதிர்பார்த்த வகையில் தான் விளைவுகள் இருக்கின்றவா? இது தொடர்பாக நான் உங்கள் எண்ணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், நன்றி.

சரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கிறது, அதன் பலன்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்குத் தேவையான பொருள்களின் விலை குறைந்திருக்கிறது, மலிவு விலையில் அவை கிடைக்கின்றன என்று ஒரு ஏழை எனக்குக் கடிதம் எழுதும் போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வடகிழக்கில், தொலைவான மலைப் பிரதேசங்களில், காடுகளில் வசிக்கும் ஒரு குடிமகன், முதலில் ஜி.எஸ்.டி. பற்றி பயமாக இருந்தது, இது என்ன என்று தெரியவில்லை; ஆனால் இப்போது நான் கற்றுக் கொண்ட பின்னர், முன்பை விட வேலை சுலபமாக ஆகி விட்டது, வியாபாரம் சுலபமாகி விட்டது என்று கடிதம் வரையும் போது சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நுகர்வோருக்கு வியாபாரிகள் மீதான நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. போக்குவரத்து மற்றும் சேவைகள் துறையில் எப்படி இந்தப் புதிய வரியமைப்பு முறை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். எப்படி டிரக்குகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது, எத்தனை விரைவாக சென்று சேர முடிகிறது, நெடுஞ்சாலைகள் எப்படி தங்குதடையின்றி இருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடிகிறது. டிரக்குகளின் வேக அதிகரிப்பு காரணமாக மாசும் குறைந்திருக்கிறது. பொருள்களும் மிக விரைவாகச் சென்று சேர்கின்றன. இந்த வசதி இருந்தாலும் கூட, முக்கியமாக பொருளாதார வேகத்துக்கும் இது பலம் சேர்த்திருக்கிறது. முதலில் இருந்த தனித்தனி வரிக்கட்டமைப்பு காரணமாக, போக்குவரத்து மற்றும் சேவைத் துறையின் பெரும்பான்மை வளஆதாரங்கள், ஆவணங்களைப் பராமரிப்பதிலேயே கழிந்து வந்தன, ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கென புதிய புதிய கிடங்குகள் ஏற்படுத்த வேண்டியிருந்தது. சரக்கு மற்றும் சேவைவரி – good and simple tax என்று நான் கூறும் இந்த வரி, உண்மையிலேயே நமது பொருளாதார அமைப்பு மீது மிகவும் ஆக்கபூர்வமான தாக்கத்தை, மிகக் குறைந்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வேகத்தில் சீரான மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ, எந்த வேகத்தில் புதுப்பெயர்வு உண்டாகியிருக்கிறதோ, புதிய பதிவுகள் பதியப்பட்டிருக்கின்றனவோ, இவையெல்லாம் நாடு முழுமையிலும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. கண்டிப்பாக பொருளாதார நிபுணர்களும், மேலாண்மை வல்லநர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் பாரதத்தின் ஜி.எஸ்.டி. செயல்பாட்டை உலகின் முன்னே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவார்கள். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில், இது ஒரு மாதிரி ஆய்வாக மலரும். ஏனென்றால், இத்தனை பெரிய அளவில், இத்தனை பெரிய மாற்றம், இத்தனை கோடி மக்களின் ஈடுபாட்டுடன், இத்தனை பெரிய தேசத்தில் இந்த முறையை வெற்றிகரமாக அமலாக்கம் செய்வது என்பது, உச்சகட்ட வெற்றி என்று கருதலாம். ஜி.எஸ்.டி.யை அமல் செய்ததில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் மாநிலங்களும் மத்திய அரசுமாக இணைந்து ஒருமித்த வகையிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவு தான், ஒவ்வொரு அரசுக்கும் இருந்த முதன்மை நோக்கம் – அதாவது இந்த ஜி.எஸ்.டி. காரணமாக ஏழையின் உணவுக்கு அதிக செலவு ஆகக் கூடாது என்பது தான். அதே போல, ஜி.எஸ்.டி. செயலி. ஜி.எஸ்.டி. செயலி வாயிலாக குறிப்பிட்டதொரு பொருளின் விலை இந்த வரியமைப்புக்கு முன்பாக எத்தனை இருந்தது, புதிய வரியமைப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பது எல்லாம் உங்கள் மொபைல் ஃபோனிலேயே கிடைத்து விடுகின்றன. ஒரு தேசம், ஒரு வரி என்ற மிகப்பெரிய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. விஷயத்தில் நான் பார்த்தது என்னவென்றால், தாலுகா முதல் மைய அரசு வரையிலான அனைத்து அரசு அதிகாரிகளும் கடுமையாக உழைத்தார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தார்கள், ஒரு வகையான நேசமான சூழ்நிலையை அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையேயும், அரசுக்கும் நுகர்வோருக்கு இடையேயும் ஏற்படுத்துவதில் மிகப்பெரிய பங்குபணியாற்றினார்கள். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும், மைய, மாநில அரசுகளின் அனைத்துப் பணியாளர்களுக்கும் நான் என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி.எஸ்.டி. பாரதத்தின் சமூக சக்தியின் வெற்றிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றி, சரித்திர சாதனை. இது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு புதிய, நேர்மையான கலாச்சாரத்துக்கு பலம் கூட்டும் பொருளாதார முறை. இது ஒருவகையில் சமூக சீர்திருத்த இயக்கமும் கூட. இத்தனை பெரிய முயற்சியை மிக இயல்பான வகையில் வெற்றியடையச் செய்த கோடானுகோடி நாட்டுமக்களுக்கும், என் கோடானுகோடி வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் புரட்சியைக் குறிக்கும் மாதம். இயல்பாகவே இந்த விஷயம் பற்றி நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டு வந்திருக்கிறோம், ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி 1920ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது தான் அதற்கான காரணம். பின்னர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது, இதை ஆகஸ்ட் புரட்சி என்றும் நாம் அறிகிறோம்; அடுத்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. ஒரு வகையில் ஆகஸ்ட் மாதத்தின் பல நிகழ்வுகள் விடுதலை வரலாற்றோடு சிறப்பான வகையில் இணைந்திருக்கின்றன. இந்த ஆண்டு நாம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். ஆனால் இந்த வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்தவர் டா. யூசுஃப் மெஹர் அலி என்பது சிலருக்குத் தான் தெரிந்திருக்கும். நமது புதிய தலைமுறையினர், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 1857 முதல் 1942 வரை நாட்டுமக்கள் எத்தனை உற்சாகத்தோடு விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள், கொடுமைகளை சகித்தார்கள் ஆகிய வரலாற்றுப் பக்கங்கள் எல்லாம் மகோன்னதமான பாரதத்தை படைக்க நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை விடப் பெரிய கருத்தூக்கம் அளிக்கக் கூடியன வேறு என்னவாக இருக்க முடியும்!! வெள்ளையனே வெளியேறு இயக்கம் பாரத சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான போராட்டம். இந்தப் போராட்டம் தான் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற, ஒட்டுமொத்த தேசத்துக்கும் மன உறுதிப்பாட்டை உண்டாக்கித் தந்தது. அந்த காலகட்டத்தில் தான், ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக, இந்துஸ்தானத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும், கிராமங்கள், நகரங்கள், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். மக்களின் கோபம் உச்சகட்டத்தில் இருந்தது. காந்தியடிகளின் அறைகூவலுக்கு செவிசாய்த்து இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் செய் அல்லது செத்துமடி என்ற மந்திரத்தை நாவிலும் மனதிலும் தாங்கி, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். தேசத்தின் லட்சோப லட்சம் இளைஞர்கள் தங்கள் படிப்பையும், புத்தகங்களையும் சுதந்திர வேள்வியில் ஆஹுதி அளித்தார்கள். சுதந்திரத்தின் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது, அவர்கள் முன்னேறிச் சென்றார்கள். ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்தியடிகள் அழைப்பு விடுத்தார் என்றாலும், தேசத்தின் அனைத்துப் பெரிய தலைவர்களையும் ஆங்கிலேய ஆட்சி சிறைச்சாலைகளில் இட்டு நிரப்பியது; அந்த காலகட்டத்தில் தான் இரண்டாம் கட்டத் தலைவர்களான டா. லோஹியா, ஜெய்பிரகாஷ் நாராயண் போன்ற மாமனிதர்களின் முதன்மையான பங்களிப்பு பளிச்சிட்டது.

1920ன் ஒத்துழையாமை இயக்கம், 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் – இவை இரண்டிலும் காந்தியடிகளின் இரு வேறுபட்ட கோணங்கள் பளிச்சிடுகின்றன. ஒத்துழையாமையின் பரிமாணம் வேறுபட்டது, 1942இல் சுதந்திர வேட்கை எந்த அளவுக்கு அதிகப்பட்டுப் போனது என்றால், காந்தியடிகள் போன்ற ஒரு மாமனிதர், செய் அல்லது செத்து மடி என்ற மந்திரத்தை முன்வைக்க வேண்டி இருந்தது. அனைத்து வெற்றிகளின் பின்னணியிலும் மக்களின் ஆதரவு பெரும்பலமாக இருந்தது, மக்களின் வல்லமை பளிச்சிட்டது, மக்களின் மனவுறுதி வெளிப்பட்டது, மக்கள் போராட்டத்தின் வலு மிளிர்ந்தது. தேசம் முழுமையும் ஒன்றுபட்டு போராடியது. சில வேளைகளில் நான் நினைத்துப் பார்க்கிறேன்…… வரலாற்றை சற்று இணைத்துப் பார்த்தால், பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857ஆம் ஆண்டு நடைபெற்றது. 1857இல் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் 1942 வரை ஒவ்வொரு கணமும் தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நீண்டநெடிய காலகட்டம் நாட்டுமக்களின் நெஞ்சத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதி பூண்டிருந்தார்கள். தலைமுறைகள் மாறின, ஆனால், மனவுறுதியில் சற்றும் தளர்ச்சி காணப்படவே இல்லை. மக்கள் தொடர்ந்து வந்தார்கள், தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், சென்றார்கள், மேலும் புதியவர்கள் வந்தார்கள், அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள், ஆங்கிலேய ஆட்சியை, கிள்ளி எறிய, தேசத்தில் கணந்தோறும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். 1857 முதல் 1942 வரை இந்த உழைப்பு, இந்தப் போராட்டம் ஒரு புதிய நிலையை ஏற்படுத்தி இருந்தது; 1942 இந்த நிலையை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அப்போது வெள்ளையனே வெளியேறு என்ற சங்கநாதம் ஒலித்தது, 5 ஆண்டுகளுக்கு உள்ளாக 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. 1857 முதல் 1942க்குள்ளாக சுதந்திர வேட்கை மக்கள் அனைவரையும் சென்று அடைந்திருந்தது. 1942 முதல் 1947 வரையிலான இந்த 5 ஆண்டுகள், மக்களின் மனவுறுதியின் வெளிப்பாடாக விளங்கிய இந்த 5 ஆண்டுகள், வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தன, தேச விடுதலைக்கான காரணமாக அமைந்தன. இந்த 5 ஆண்டுகள் தாம் தீர்மானமான ஆண்டுகள்.

இப்போது நான் இந்தக் கணக்கோடு உங்களை இணைக்க விரும்புகிறேன். 1947ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்தோம். இன்று 2017இல் இருக்கிறோம். சுமார் 70 ஆண்டுகள் ஓடி விட்டன. அரசுகள் வந்தன சென்றன. அமைப்புகள் உருவாயின, மாற்றம் அடைந்தன, மலர்ந்தன, வளர்ந்தன. தேசத்தை அதன் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டார்கள். தேசத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க, ஏழ்மையை அகற்ற, வளர்ச்சி ஏற்படுத்த என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகளும் கிடைத்தன. எதிர்பார்ப்புக்களும் விழித்துக் கொண்டன. எப்படி 1942 முதல் 1947 வரையிலான காலகட்டம் வெற்றியடைவதற்கான தீர்மானமான காலமாக அமைந்ததோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகள், நமது மனவுறுதியும் தீர்மானமும் வெற்றி அடைய, நம் முன்னே காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை நாம் சபதமேற்கும் நன்நாளாகக் கொண்டாட வேண்டும், 2022ஆம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியிருக்கும், நாம் மேற்கொண்ட இந்த சபதத்தின் வெற்றிக்கனியை அப்போது அடைந்திருப்போம். 125 கோடி நாட்டு மக்களும் ஆகஸ்ட் 9, புரட்சி தினத்தை நினைவில் கொண்டு இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால், தனி நபர் என்ற முறையில், குடிமகன் என்ற முறையில் – நான் தேசத்துக்காக இந்த அளவு செய்வேன், குடும்பம் என்ற வகையில் இந்த அளவு செய்வேன், சமுதாயம் என்ற வகையில் இப்படிச் செய்வேன், நகரம் என்ற முறையில் இதைச் செய்வேன், அரசுத் துறை என்ற வகையில் இதைச் செய்வேன், அரசு என்ற முறையில் இதைச் செய்வேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் சபதமேற்க வேண்டும். அப்படி மேற்கொள்ளப்பட்ட சபதங்களை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் 1942 முதல் 1947 வரையிலான 5 ஆண்டுகள் எப்படி நாட்டின் விடுதலையை உறுதி செய்த தீர்மானமானமான ஆண்டுகளாக ஆனதோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான இந்த 5 ஆண்டுகள், பாரதத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆண்டுகளாக மலரும், இதை நாம் இணைந்து செய்தாக வேண்டும். தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கொண்டாட இருக்கிறோம். அதற்கு நாம் அனைவரும் ஒரு உறுதியான அர்ப்பணிப்பை இன்றே மேற்கொண்டாக வேண்டும். இந்த 2017ஆம் ஆண்டு நம் உறுதிப்பாட்டின் ஆண்டாக மாற வேண்டும். இந்த ஆகஸ்ட் மாத உறுதிப்பாட்டோடு நாம் இணைய வேண்டும், நம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். மாசு – பாரதம் விட்டு வெளியேறு, ஏழ்மை – பாரதம் விட்டு வெளியேறு, ஊழல் – பாரதம் விட்டு வெளியேறு, தீவிரவாதம் – பாரதம் விட்டு வெளியேறு, சாதி வேற்றுமை – பாரதம் விட்டு வெளியேறு, மதவாதம் – பாரதம் விட்டு வெளியேறு. இன்றைய தேவை செய் அல்லது செத்து மடி அல்ல; மாறாக, புதிய பாரதம் படைப்பது என்ற உறுதிப்பாட்டோடு நம்மை இணைத்துக் கொள்வது தான்; இதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், உழைக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டோடு வாழ வேண்டும், செயல்பட வேண்டும். வாருங்கள், இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் நம் உறுதிப்பாட்டுக்கு செயலூக்கம் கொடுத்து, வெற்றி பெறச் செய்யும் பேரியக்கத்தைத் தொடங்குவோம். ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூக அமைப்பும், உள்ளாட்சி அமைப்புக்களும், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் புதிய பாரதம் படைக்க, ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்வோம். நமது சபதத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வெற்றியடைச் செய்யும் உறுதிப்பாடாக இது அமையட்டும். இளைஞர் அமைப்புகள், மாணவ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியன பொது கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யலாம். புதிய புதிய கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த இலக்கைச் சென்று சேர வேண்டும்? ஒரு தனிநபர் என்ற வகையில் அதில் எனது பங்களிப்பு என்னவாக இருக்க முடியும்? வாருங்கள், இந்த உறுதிப்பாட்டு தினத்தோடு நாம் நம்மை இணைத்துக் கொள்வோம்.

நான் இன்று குறிப்பாக ஆன்லைன் உலகம் பற்றி பேச விரும்புகிறேன், இன்னும் குறிப்பாக எனது இளைய நண்பர்களுக்கும், சகாக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் – புதிய பாரதம் படைக்க, புதுமையான வழிகளில் பங்களிப்பு அளிக்க நீங்கள் முன்னே வாருங்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொளிகள், போஸ்ட்கள், பிளாகுகள், கட்டுரைகள், புதிய புதிய சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் நீங்கள் முன்னெடுத்து வாருங்கள். இந்த இயக்கத்தை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் வாருங்கள். நரேந்திர மோடி செயலியில் இளைய சமுதாய நண்பர்களுக்காக, வெள்ளையனே வெளியேறு வினாவிடைப் போட்டி நடத்தப்படும். இந்த வினாவிடைப் போட்டி, இளைஞர்களை தேசத்தின் பெருமிதம் நிறைந்த வரலாற்றோடு இணைக்கவும், சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. நீங்கள் இந்தச் செய்தியை நன்கு பரப்பி, பரவலாக்கம் செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் செங்கோட்டையிலிருந்து தேசத்தோடு உரையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஒரு கருவி தான். அங்கே தனிப்பட்ட மனிதன் பேசவில்லை. செங்கோட்டையில் 125 கோடி நாட்டுமக்களின் குரல் எதிரொலிக்கிறது. அவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும், அன்று நான் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எனக்கு ஆலோசனைகள் வந்து குவிகின்றன. இந்த முறையும் கூட நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். MyGovஇலோ, நரேந்திர மோடி செயலியிலோ நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கண்டிப்பாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானே அவற்றைப் படிக்கிறேன், ஆகஸ்ட் 15 அன்று என்னிடத்தில் எத்தனை நேரம் இருக்கிறதோ, அன்று இவற்றை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். கடந்த 3 முறையும் நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆற்றிய உரைகள் சற்று நீண்டிருந்தன என்று, என் முன்பாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த முறை அளவு குறைவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அதிகப்படியாக 40-45-50 நிமிடங்களுக்கு உள்ளாக நிறைவு செய்து விடுவேன். நான் எனக்கென விதிமுறைகளை விதித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்; என்னால் செய்ய முடியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது உரையை எப்படி சுருக்கமாக அமைப்பது என்று இந்த முறை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்.

நாட்டுமக்களே, நான் இன்னொரு விஷயம் குறித்தும் உங்களோடு பேச விரும்புகிறேன். பாரதத்தின் பொருளாதார அமைப்பில் ஒரு சமூக பொருளாதாரம் அடங்கியிருக்கிறது. அதை நாம் எப்போதும் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது. நமது பண்டிகைகள், நமது கொண்டாட்டங்கள் எல்லாம் வெறும் ஆனந்தம் சந்தோஷத்துக்கான சந்தர்ப்பங்கள் மட்டுமல்ல. நமது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் சமூக மறுமலர்ச்சிக்கான ஒரு இயக்கமும் கூட. ஆனால் இதோடு கூட, நமது ஒவ்வொரு பண்டிகையும், பரம ஏழையின் பொருளாதார வாழ்வோடு நேரடி தொடர்பு வைத்திருக்கின்றது. சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன், கிருஷ்ண ஜெயந்தி, பிறகு பிள்ளையார் சதுர்த்தி, பிறகு சவுத் சந்திர, பிறகு அனந்த் சதுர்தசி, துர்க்கா பூஜை, தீபாவளி என ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன; இந்த வேளையில் தான் ஏழைக்கு வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. கூடவே பண்டிகைகளோடு ஒரு இயல்பான ஆனந்தமும் இணைகிறது. பண்டிகைகள் உறவுகளில் இனிமை, குடும்பத்தில் இணக்கம், சமூகத்தில் சகோதரத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இவை தனிநபரையும் சமூகத்தையும் இணைக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான இயல்பான பயணம் தொடர்ந்து நடக்கிறது. அஹ் சே வியம்ம், அதாவது நான் என்ற நிலையிலிருந்து நாம் என்ற நிலையை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்பு. பொருளாதார நிலை என்ற வகையில், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு பல மாதங்கள் முன்பிலிருந்தே கூட, பல குடும்பங்கள் சின்னச் சின்ன குடிசைத் தொழில் என்ற வகையில், ராக்கிகளை தயாரிக்கத் தொடங்கி விடுகின்றன. பருத்தி முதல் பட்டு வரையிலான இழைகளைக் கொண்டு பலவகையான ராக்கிகள் உருவாக்கப்படுகின்றன; ஆனால் இன்றளவில் மக்கள் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ராக்கிகளை அதிகம் விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். ராக்கி தயாரிப்பாளர்கள், ராக்கி விற்பவர்கள், இனிப்புப் பண்டங்கள் தயாரிப்போர் என ஆயிரக்கணக்கானோரின் தொழில், ஒரு பண்டிகையோடு இணைந்திருக்கிறது. நமது ஏழை சகோதர சகோதரிகளின் குடும்பத்தவர் வயிறுகள் இதனால் தான் நிரம்புகின்றன. நாம் தீபாவளியன்று தீபங்கள் ஏற்றுகிறோம், இது மட்டுமே பிரகாசமான திருநாள் என்பதல்ல; இது பண்டிகை நாள் என்பதால் வீட்டை அலங்கரிக்கிறோம் என்பதல்ல. சின்னச் சின்ன அகல் விளக்குகளை தயாரிக்கும் ஏழைக் கைவினைஞர்களோடு இது நேரடித் தொடர்பு உடையது. ஆனால் நான் இன்று பண்டிகைகள் குறித்தும், இவைகளோடு தொடர்புடைய ஏழைகளின் பொருளாதார நிலை பற்றியும் பேசும் அதே வேளையில், நான் சுற்றுச்சூழல் பற்றியும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சில வேளைகளில் என்னை விட நாட்டுமக்கள் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன். கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து, விழிப்புணர்வு மிக்க குடிமக்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக எனக்கு கடிதங்கள் எழுதி வருகிறார்கள். நீங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு மிக முன்னதாகவே சுற்றுச்சூழலுக்கு உகந்த பிள்ளையார் பற்றிப் பேசுங்கள், அப்போது தான் மண்ணில் செய்யப்பட்ட பிள்ளையார் மீதான விருப்பம் அதிகரிக்க, இப்போதிலிருந்தே திட்டமிட முடியும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விழிப்புணர்வு மிக்க குடிமக்களுக்கு நான் முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்துக்கு முன்பாகவே இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை சமூக அளவிலான பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. லோக்மான்ய பாலகங்காதர திலகர் தான் இந்த மகத்தான பாரம்பரியத்தைத் தோற்றுவித்தவர். இந்த ஆண்டு சமூகரீதியிலான கணேச உற்சவத்தின் 125ஆம் ஆண்டு. 125 ஆண்டுகள், 125 கோடி நாட்டு மக்கள் – லோக்மான்ய திலகர், எந்த அடிப்படை உணர்வோடு சமூக ஒற்றுமை, சமூக விழிப்புணர்வுக்காக, சமூக கலாச்சாரத்துக்காக, சமூக ரீதியிலான கணேஸோத்ஸவத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பது தொடர்பான கட்டுரைப் போட்டிகள், விவாத மேடைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம், லோகமான்ய திலகரின் பங்களிப்பை நினைவு கூரலாம். திலகரின் உணர்வைக் கருவாக வைத்துக் கொண்டு, அந்த திசையில் சமூகரீதியிலான கணேச உற்சவத்தை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம். இந்த உணர்வை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும்; கூடவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூழலுக்கு ஏற்ற வகையிலான, மண்ணால் தயாரிக்கப்பட்ட பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்குவது என்பதே நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும். இந்த முறை நான் மிகவும் முன்னதாகவே கூறியிருக்கிறேன்; நீங்கள் அனைவரும் என் கருத்தோடு இணைவீர்கள் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன், இதனால் பலன் அடைவது நமது ஏழைக் கலைஞன், பிள்ளையார் திருவுருவங்களைப் படைக்கும் ஏழைக் கலைஞன், அவனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், ஏழையின் வயிறு நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் பண்டிகைகளை ஏழையோடு இணைப்போம், ஏழையின் பொருளாதார நிலையோடு இணைப்போம், நமது பண்டிகைகளின் சந்தோஷம் ஏழைக் குடும்பத்தின் பொருளாதாரத் திருவிழாவாகட்டும், பொருளாதார ஆனந்தம் ஏற்படட்டும் – இதுவே நம்மனைவரின் முயற்சியாக ஆக வேண்டும். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும், வரவிருக்கும் பல்வேறு பண்டிகைகளுக்காக, கொண்டாட்டங்களுக்காக, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, கல்வித் துறையாகட்டும், பொருளாதாரத் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், விளையாட்டுத் துறையாகட்டும் – நமது பெண்கள் தேசத்தின் நற்பெயருக்கு ஒளிகூட்டி வருகிறார்கள், புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்கிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டுப் பெண்கள் மீது நம்மனைவருக்கும் பெருமையாக இருக்கிறது, பெருமிதம் பொங்குகிறது. கடந்த சில நாட்கள் முன்பாக நமது பெண்கள், பெண்களுக்கான க்ரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பிரமாதமான செயல்பாட்டைப் புரிந்திருக்கிறார்கள். இந்த வாரம் அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களோடு உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, ஆனால் தங்களால் உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இயலவில்லையே என்ற சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவர்கள் முகங்களில் இந்த அழுத்தம், இந்த நெருக்கடி கப்பியிருந்தது. நான் என் தரப்பில் ஒரு வித்தியாசமான மதிப்பீட்டை அந்தப் பெண்களுக்கு அளித்தேன். பாருங்கள், இன்றைய காலகட்டம் ஊடக உலகமாக இருக்கிறது, எதிர்பார்ப்புகள் மிகுந்து விட்டன, எந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்றால், வெற்றி கிடைக்கவில்லை என்று சொன்னால், அது கோபமாக மாறி விடுகிறது; பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் தோல்வி அடைந்து விட்டால், தேசத்தின் கோபம் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கொப்பளிப்பதை நாம் பல விளையாட்டுக்களில் பார்த்திருக்கிறோம். சிலரோ, வரம்புகளை மீறிப் பேசி விடுகிறார்கள், எழுதி விடுகிறார்கள், இதனால் அதிக வேதனை ஏற்படுகிறது. ஆனால் முதன் முறையாக, நமது பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில், 125 கோடி நாட்டுமக்களும், அந்தத் தோல்வியை தங்கள் தோள்களில் சுமந்து நின்றார்கள். சற்றுக் கூட பாரத்தை, அந்தப் பெண்கள் அனுபவிக்க விடவில்லை. இதோடு நின்று விடாமல், இந்தப் பெண்கள் படைத்த சாதனை குறித்துப் பாராட்டினார்கள், அவர்களைப் பெருமைப் படுத்தினார்கள். இதை நான் நல்லதொரு மாற்றமாகவே காண்கிறேன். இது போன்றதொரு நற்பேறு உங்களுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது என்று நான் அந்தப் பெண்களிடம் கூறினேன். நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து அடியோடு விலக்கி விடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். நீங்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், 125 கோடி நாட்டு மக்கள் மனங்களையும் வெற்றி கொண்டு விட்டீர்கள். உண்மையிலேயே நமது நாட்டின் இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதில் பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நான் மீண்டும் ஒருமுறை, இளைய சமுதாயத்தினருக்கு, குறிப்பாக நமது பெண்களுக்கு, என் இதயம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, நான் மீண்டும் ஒருமுறை ஆகஸ்ட் புரட்சியை, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியை, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை, மறுபடி ஒருமுறை 2022ஆம் ஆண்டினை, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண வேண்டும், அந்த உறுதியை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கான ஒரு செயல்திட்டத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். நாமனைவரும் தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும். வாருங்கள், நாம் இணைந்து பயணிப்போம், ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டு பயணிப்போம். தேசத்தின் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பானதாகவே அமையும் என்ற நம்பிக்கையை மனதில் தாங்கிப் பயணிப்போம், முன்னேறுவோம். பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.



(Release ID: 1498701) Visitor Counter : 121


Read this release in: English