மத்திய அமைச்சரவை

விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டது

Posted On: 19 JUL 2017 8:46PM by PIB Chennai

இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதிப் பணிக்காக விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. இந்த உடன்பாடு 2017ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பெங்களூரிலும் 22ம் தேதி நெதர்லாந்தின் ஹாக் நகரிலும் கையெழுத்தானது.

பலன்கள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவிகுறித்த தொலையுணர்வு உள்ளிட்ட செயல்முறை ஆய்வுகள்; செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் வழிகாட்டி; கோள்கள் குறித்த கண்டுபிடிப்புகள்; விண்கலத்தின் பயன்பாடு மற்றும் விண்வெளி மற்றும் தரைக் கட்டுப்பாடு; விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றுக்கு வழி வகுக்கும்.

நடைமுறைகள்:

விண்வெளித் துறை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (DOS/ISRO), நெதர்லாந்து விண்வெளி அலுவலகம் (NSO) ஆகியவற்றின் விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து கூட்டுச் செயல்பாட்டுக் குழுவை அமைப்பதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். அந்தக் குழு இந்த ஒப்பந்த்தத்தை நடைமுறைப்படுத்துவது குறிப்பிட்ட காலத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்வது ஆகியவை தொடர்பான செயல் திட்டத்தை மேற்கொள்ளும். புதிய ஆய்வுப் பணிகளுக்கும் புவிநிலை குறித்து தொலையுணர்வுத் துறையில் மேற்கொள்ளும் பயன்பாடுகள்; செயற்கைக்கோள் தகவல் தொடர்பு; செயற்கைக்கோள் வழிகாட்டி;  விண்வெளி அறிவியல்; விண்வெளி ஆய்வு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும்.

மனிதகுலத்துக்குப் பயன்தரும் வகையிலான விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அமைவதற்கு  இந்த ஒப்பந்தம் உதவும். இதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதிகள் பிரிவுகளும் பயன்பெறும்.

பின்னணி:

விண்வெளித் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (DOS/ISRO) ஆகியவையும் நெதர்லாந்தின் ட்வென்டே பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுப் புவித் தகவல் அறிவியல் மற்றும் புவி ஆய்வு மையமும் நீண்டகாலமாக திறன் மேம்பாட்டு ஆய்வினை மேற்கொண்டுள்ளன. அதைப் போல் நெதர்லாந்து வானிலை நிறுவனத்துடனும் (KNMI) புவி ஆய்வில் அளவிடல், சரிபார்த்தல் போன்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி ஆய்வுத் துறையின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நெதர்லாந்துக்குச் சொந்தமான DELFI-C3 எனப்படும் செயற்கைக்கோளை 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தியது. இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் விண்வெளி குறித்த ஒத்துழைப்பு தொடர்பான நடைமுறைகளை இஸ்ரோ நிறுவனமும் நெதர்லாந்து விண்வெளி அலுவலகமும் விவாதித்துள்ளது. அதன்படி, இரு தரப்பினரும் அமைதிப் பயன்பாடுகளுக்கான விண்வெளி ஆய்வு தொடர்பான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவித்துள்ளன.

 

****

 



(Release ID: 1496370) Visitor Counter : 83


Read this release in: English