மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வரி விவகாரம் குறித்த ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 JUL 2017 8:44PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளான பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் வருவாய் நிர்வாகத் துறைகளுக்கும் இடையே வரி விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு உடன்பாடு ஏற்படுவதற்கு ஒப்புதல் அளித்தது.

குறிக்கோள்:

இந்த உடன்பாடு பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் சர்வதேச அமைப்புகளில் வருவாய் நிர்வாகங்களில் பொதுவான வரிவிதிப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும். அதைப் போல் திறன் மேம்பாட்டுச் செயல்களிலும் விவரங்களைப் பகிர்வதற்கும் துணை புரியும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வருவாய் நிர்வாக தலைமைகள் தங்களுக்கு இடையில் வரி விதிப்பு தொடர்பாகவும் தொடர்ந்து தொடர்புகளை மேற்கொள்ளவும், அனைவரது நோக்கங்கள் ஒன்று சேரவும் வல்லுநர்கள் கூடிப் பேசவும் சர்வதேச நிலையில் வரி குறித்த பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த உடன்பாடு வழிவகுக்கும். இவற்றுடன் இந்த உடன்பாட்டின் கீழ் பரஸ்பர நம்பிக்கையும் தகவல்களைப் பாதுகாப்பதும் உறுதி செய்யப்படும்.

பாதிப்பு:

இந்த உடன்பாடு வரி விவகாரங்களில் பயனுள்ள ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கும். பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடு ஜி (-) 20 நாடுகள் அமைத்த வரி விவகாரங்களில் இந்த நாடுகளுக்கு மட்டுமின்றி இதர வளர்ந்து வரும் நாடுகளுக்கும் நீண்ட கால பயனை அளிக்கும்.

பின்னணி:

பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வருவாய்த் துறைகளின் தலைவர்கள் வரி விவகாரத்தில் சாதகமான வகையில் ஒத்துழைப்பு குறித்து வழக்கமாக சந்தித்து விவாதித்து வருகின்றனர். வெளிப்படைத் தன்மை, ஒற்றுமை, சமநிலை, பரஸ்பர புரிதல், அனைத்தும் உள்ளடக்கும் நிலை, பரஸ்பர பயன்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக 2016ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கோவாவில் செய்யப்பட்ட பிரகடனத்தின்படி எடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு அடிப்படையிலான கருத்துகள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். பரஸ்பர நலன் விஷயத்தில் ஒத்துழைப்பையும் புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் நான்கு அம்சங்களை பிரிக்ஸ் (BRICS) நாடுகள் அடையாளம் கண்டுள்ளன. இவை தொடர்பாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்று பிரிக்ஸ் நாடுகளின் வருவாய்த்துறைத் தலைவர்கள் 2016ம் ஆண்டு மே மாதம் சீனா பீஜிங் நகரில் நடைபெற்ற வரி நிர்வாகப் பேரவைக் கூட்டத்தை அடுத்து முடிவு செய்தனர்.

 

 

****



(Release ID: 1496320) Visitor Counter : 79


Read this release in: English