குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய குடியரசுத்தலைவர் டெஹ்ராடூனில் 'ஆஷியானா அனெக்ஸ்' -ஐ திறந்து வைத்தார்.
Posted On:
10 JUL 2017 7:17PM by PIB Chennai
உத்தரகாண்ட், டெஹ்ராடூனில், 'ஆஷியானா'வில் குடியரசுத்தலைவர்கள் ஓய்வுக்காக செல்லும்போது, குடியரசுத்தலைவர் மாளிகையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட 12 குறைந்த செலவிலான குடியிருப்புகள் கொண்ட 'ஆஷியானா அனெக்ஸ்' -ஐ ஜூலை 10, 2017 அன்று இந்திய குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி, திறந்து வைத்தார்.
இந்தக் குடியிருப்புகள், ஏஷியன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஹாபிடெக்-நிவாரா தந்த்ரா எனும் 'தளம் மீதான துப்புரவு ஒருங்கிணைந்த சமூக வீடமைப்பு தொழில்நுட்பப் புதுஉத்திகளை' பயன்படுத்திக் கட்டப்பட்டவை. இந்தத் தொழில்நுட்பப் புதுஉத்திகள், உள்ளூர் மண்ணையே பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 'நெருக்கமாகப் பிணையும் பாளங்கள்' எனப்படும் தனித்தன்மையான பாளங்களைக் கொண்டவை. அதே தளத்திலேயே இந்தப் பாளங்கள் சுற்றுச்சூழல்களுக்குப் பாதகமில்லாத பசுமைச் செய்முறையில் செய்யப்படுகின்றன. இந்தப் பாளங்கள், எஃகு கம்பிகளைப் பயன்படுத்தி கிடைமட்டத்திலும், செங்குத்திலும் வலுப்படுத்துவதற்காகப் புதுமையான உட்குழிவுகளைக் கொண்டவை. அவை வழக்கமான கூரை உத்திரங்கள், தூண்கள், கான்க்ரீட் சன்னல் உத்திரங்கள் போன்றவற்றின் உபயோகத்தை முற்றிலுமாக நீக்கிட உதவுகின்றன. இந்த உட்குழிவுகள் வெப்பம், இரைச்சல் மாசுகள் மற்றும் நீர் கசிவுகள் போன்றவற்றிற்கு எதிராக காற்றுத்திரைகளாக செயல்படுகின்றன. இந்தக் குடியிருப்புகளின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுபவை என்னவெனில், இவை பேரிடர் நெகிழ்திறன், நீடித்த உழைப்பு மற்றும் செலவினச் சிக்கனம் கொண்டவை. துப்புரவுக் கழிவுகளை கையாளும் விஞ்ஞான செயல்முறைகள் நோய் இடர்களைத் தடுப்பதோடு, குடியிருப்போர் மற்றும் சுற்றங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்கின்றன.
அந்த நிகழ்வில், பிரஷாக் டெக்னோ என்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டிற்கும் இடையில், குறைந்த செலவு, பேரிடர் நெகிழ்திறனுள்ள வீடுகளில் கவனம் வைத்து, -முக்கியமாக கிராமப்புறங்களில் "அனைவர்க்கும் வீடு" நோக்கத்தில், அதிலும் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் மக்களுக்கு- தனி முனைப்புடன் நிறைவேற்றுவதற்கு, ஹாபிடெக்-நிவாரா தந்த்ரா தொழில்நுட்ப தீர்வுகளின் பலன்களை பெருக்கித் தந்திட உடனுழைக்க, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
டெஹ்ராடூனில் ராஜ்கபூர் சாலையில் உள்ள "ஆஷியானா" முதன்மைக் கட்டடம், இணைப்புக் கட்டடம், மேல் லாயங்கள்/வரிசைகள் மற்றும் கீழ் லாயங்கள்/வரிசைகள் அவற்றோடு இணைப்பிலுள்ள சாலைகள் மற்றும் வழிகள் ஆகியவற்றைக் கொண்டது. முந்தைய காலத்தில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பாளர்களின் தலைமையாளரின் மாளிகையாக இருந்து பயன்படுத்தாமல் கிடந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால் தற்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் அவர்கள்தான் கடைசியாக மார்ச், 1998 இல் இங்கே தங்கினார். புதுப்பிக்கப்பட்ட "ராஷ்ட்ரபதி ஆஷியானாவின்" முதன்மைக் கட்டடம், குடியரசுத் தலைவரால் செப்டம்பர் 27, 2016 அன்று திறக்கப்பட்டது.
*****
(Release ID: 1496135)
Visitor Counter : 124