சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நெடுஞ்சாலைகளை ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மற்றும் ஆயில் மற்றும் கேஸ் குழாய்கள் பதிக்கப் பயன்படுத்தலாம்: திரு கட்கரி

Posted On: 14 JUL 2017 6:27PM by PIB Chennai

தேசத்தில், வெளிப்படையான மற்றும் திறம்மிக்க நிர்வாகத்தை அளிப்பதின் அடிப்படையாக தகவல் தொழில்நுட்பம் இருக்கிறது என்று சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்போக்குவரத்து அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். ஏபிபி (ABP) குழுமம் மற்றும் குறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து நியூ டில்லியில் இன்று  ஏற்பாடு செய்திருந்த  INFOCOM-2017ல் அவர் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

உலக அளவில் இந்தியப் பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் நிபுணர்களின் பங்களிப்பை சிறப்பித்துப் பேசிய திரு கட்கரி, சர்வதேச் சூழலில் போட்டியைச் சந்திக்கும் திறனைக் உருவாக்கி அதனை நிர்வகிக்கவும் நாம் விரும்பினால், நமது மூலதனங்களில் இருந்து மிகஅதிக அளவில் வருவாயைப் பெறுவதற்குத் தொழில்நுட்பத்தை உந்துசக்தியாகப் பயன்படுத்துவது தேவை என்றார் அவர். மேலும் அவர், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கி.மீ  நெடுஞ்சாலைகள் இருக்கின்றன; இந்தச் சாலைகள் முழுவதையும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மற்றும் எண்ணெய் மற்றும் கேஸ் குழாய்கள் பதிக்கப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக கூறினார். இதன் மூலம் அமைச்சகத்திற்கு  வருவாய் கிடைக்கும் என்றும் அதனை சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

சாலைப் போக்குவரத்தைப் பற்றிப் பேசிய திரு கட்கரி, மிக விரைவில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை முற்றிலும் கணினிமயம் ஆக்கப்படும் என்றார். மனிதத் தலையீடின்றி கணினி நிரல் ஒன்றின் உதவியுடன்  உரிமம் பெறுவதற்கான உடல் தகுதி நிர்ணயிக்கப் படும்;  தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்குவது உறுதி செய்யப்படுவதின் மூலம் சாலைப் பாதுகாப்பு பெருமளவிற்கு உயரும்.

திரு கட்கரி மேலும், தனது அமைச்சகம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்திய மின்–சுங்கவரி முறையால், பெருவழிச்சாலைகளில் உள்ளச் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்பட்டதாகக் கூறினார். FAST என்ற அடையாள அட்டை தாங்கிய ட்ரக்குகளும் மற்ற வாகனங்களும் சங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியத் தேவையில்லை; ஏனெனில், இவற்றிற்கான சுங்கக் கட்டணம் RFID அட்டைகளின் மூலம் மின்னணு முறையில் செலுத்தப்படுகின்றன என்றார். மேலும் அதிக அளவிலான வாகனங்கள் இந்த FAST அட்டையைப் பயன்படுத்த வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.  மிக விரைவில்,  இவை, வாகனங்கள் விற்பவர்களிடம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். புதிய வாகனங்கள் இனி இந்த அட்டைகள் பொருத்தப்பட்டே வெளியில் வரும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருப்பதின் விளைவான சுற்றுப்புறச் சூழல் மாசு மற்றும் தேவையற்ற எரிபொருள் செலவைத் தவிர்க்கவும் மின்–சுங்கவரி முறை உதவுகிறது.

தொலைத் தொடர்புத் துறைச் செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.

*******



(Release ID: 1496117) Visitor Counter : 66


Read this release in: English