மத்திய அமைச்சரவை
ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இடுகை இடப்பட்ட நாள்:
12 APR 2017 4:45PM by PIB Chennai
ஆந்திரபிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை போல ஆளுமை அமைப்பையும் பட்டம் வழங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமையையும் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகளுக்கான “உயர்திறன் மையமாக” செயல்படுவதற்கு உரிய அந்தஸ்தை இதற்கான சட்டம் ஒன்று வழங்கும்.
இந்த கல்வி நிறுவனத்தை அமைக்க ரூ.655.46 கோடி செலவினத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நிறுவன வைப்பு நிதியாக ரூ.200 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்தது.(எண்ணெய் நிறுவனங்கள் நிறுவன வைப்பு நிதியாக அளித்த ரூ.200 கோடிக்கும் கூடுதலாக இந்த நிதி அமையும்)
2014ம் ஆண்டு ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் 13வது பிரிவின்படி இந்த நிறுவனம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. பெட்ரோலியத் துறையில் திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவது, இந்தத் துறை வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் இதன் அருகில் அமைந்துள்ள கிருஷ்ணா- கோதவரி படுகை திட்டம், விசாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் திட்டமிடப்பட்டுள்ள காக்கிநாடா பெட்ரோ வேதியியல் வளாகம் ஆகியவற்றிலிருந்து உதவி பெற்று வலுப்பெறும்.
பின்னணி
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சப்பாவரம் ஒன்றியத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி கல்வி நிறுவனம் அமைக்க ஆந்திர பிரதேச அரசு 200 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது இந்த நிறுவனம் 2001 ஆந்திரபிரதேச சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி 18.04.2016 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்காலிக வளாகம் ஆந்திர பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டு 2016-17ம் கல்வியாண்டில் 2 பட்டபடிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் பொறியியல், வேதிப்பொறியியல் ஆகிய இந்த வகுப்புகள் ஒவ்வொன்றிலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த நிறுவனத்துக்கு வழிகாட்டும் பொறுப்பினை கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.)ஏற்றுக் கொண்டுள்ளது.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1487871)
வருகையாளர் எண்ணிக்கை : 38