Technology
வரிசை முறையிலிருந்து க்யூஆர் குறியீடு வரை: இந்தியாவின் பணப்பரிமாற்ற முறையில் புரட்சி
விரைவான, எளிமையான மற்றும் உள்ளடக்கிய பணப்பரிமாற்ற முறை
Posted On: 11 APR 2026 9:05AM

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண நிதிப் பரிமாற்றத்திற்கு கூட நேரமும், உழைப்பும், பொறுமையும் தேவைப்பட்டது. கட்டணங்களைச் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பணம் அனுப்புவதற்கு வங்கிக்குச் சென்று, படிவங்களை நிரப்பி பணம் அனுப்பப்பட்டதை, உறுதிப்படுத்த பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வங்கிக் கணக்கு இல்லாத இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், நிதி அமைப்பிலிருந்தே விலகி இருந்தனர். ஆனால் அத்தகைய நிலையில் இந்தியா தற்போது இல்லை. மாறிவிட்டது!
இந்தியாவின் நிதிசார் பயணம் கடந்த பல நூற்றாண்டுகளில் பண்டமாற்று முறைகளில் தொடங்கி, சோழிகள், நாணயங்கள், காகிதச் செலாவணி, காசோலைகள் வரை பரிணமித்துள்ளது. அதன் நவீன வரலாற்றின் பெரும்பகுதிக்கு, ரொக்கப் பணம் மட்டுமே பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாக இருந்தது. காசோலைகளும் வரைவு காசோலைகளும் பணம் செலுத்துவதை முறைப்படுத்திய அதே வேளையில், அவை மெதுவாகவும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அணுகக்கூடியதாகவும் இருந்தன. வங்கி உள்கட்டமைப்பு பெரும்பாலும் நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டிருந்தது, இது கிராமப்புற மற்றும் தொலைதூர மக்களைச் சென்றடையாமல் இருந்தது.
2000-களின் முற்பகுதியில் பணம் செலுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கி 2004-ல் ரியல்-டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) மற்றும் 2010-ல் இம்மீடியேட் பேமென்ட் சர்வீஸ் (ஐஎம்பிஎஸ்) போன்ற அமைப்புகளை அறிமுகப்படுத்தியது, இது விரைவான, 24 மணிநேரத்திற்குள்ளான பணப்பரிமாற்றங்களைச் சாத்தியமாக்கியது. இவை முக்கிய மைல்கற்களாக இருந்தபோதிலும், இந்த சேவைகள் வங்கி அமைப்புக்குள் இருந்தவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், முறையான நிதிச் சேவைகளுக்கான அணுகல் பலருக்குக் குறைவாகவே இருந்தது.
இந்திய மக்கள்தொகையின் ஒரு பெரிய பகுதி முறையான நிதி சார் நடவடிக்கைகளுக்கு வெளியே இருந்தது. கடன், காப்பீடு அல்லது பாதுகாப்பான சேமிப்பிற்கான அணுகல் இல்லாமல் இருந்தது. அளவிடக்கூடிய, உள்ளடக்கிய மற்றும் நிகழ்நேர டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லாமல் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் முழுமையாகச் சென்றடைய முடியாத சூழல் இருந்தது. இதன் மூலம் மாற்றத்தின் தேவை தெளிவாக இருந்தது. அந்தத் தேவைதான் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சிக்கு வித்திட்டது.
மூன்று திட்டங்களின் சங்கமம்: டிஜிட்டல் வங்கிச் சேவையில் கட்டமைப்பு ரீதியான முன்னேற்றம்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சி மூன்று முக்கியத் தூண்களைக் கொண்டதாகும்: பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு. இவை ஒட்டுமொத்தமாக 'ஜாம் சங்கமம்' என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தூணும் ஒரு தனித்துவமான நோக்கத்தைக் கொண்டுள்ளபோதிலும் அவை அனைத்தும் இணைந்து நிதி இழப்புகளைக் குறைத்து, முறையான வங்கிச் சேவை மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரித்து டிஜிட்டல் சேவைகளுக்கு அவர்களைத் தயார்படுத்தி நிதிச் சூழலை வலுப்படுத்தியுள்ளன.
'ஜாம் சங்கமம்' நமது வங்கிச் சேவையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது."
— நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா, பூஜ்ஜிய இருப்புத் தொகையுடன் கூடிய வங்கிக்கணக்குகளை பெருமளவில் தொடங்கச் செய்ததன் மூலம் பல லட்சம் பேரை முறையான வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவந்துள்ளது. மிகவும் பின்தங்கிய மக்களும் நிதிசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்கிறது. ஆதார், ஒரு நம்பகமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்கி இந்த அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது. இது துல்லியமான இலக்குடன் தடையற்ற சேவைகளை வழங்க உதவுகிறது. இவை இரண்டிற்கும் உறுதுணையாக உள்ள மொபைல் இணைப்பு மற்றும் இணைய வசதியின் விரைவான விரிவாக்கம், மக்களுக்குத் தகவல் தொடர்பு, அங்கீகாரம் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான நிகழ்நேர வசதியை வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பு, நேரடிப் பணப் பரிமாற்ற முறையின் மூலம் முழுமையடைந்தது. இது அரசு வழங்கும் பலன்களை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதை எளிதாக்கியுள்ளது. இடைத்தரகர்களின்றி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் இந்த முறை, நேரடிப் பணப் பரிமாற்ற முறை செயல்திறனை மேம்படுத்தியுள்ளதோடு, டிஜிட்டல் அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.
இந்த மாற்றம் வெறும் அணுகலோடு மட்டும் நின்றுவிடாமல் மக்கள் பங்கேற்பையும் சாத்தியமாக்கியுள்ளது. மக்கள் நேரடிப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடத் தொடங்கியதும், அவர்கள் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றங்களை நன்கு அறிந்தவர்களாக மாறினர். இது ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை போன்ற தளங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தது.
யுபிஐ: ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு

2016-ம் ஆண்டில், தேசிய பரிவர்த்தனைக் கழகம், ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையை (யுபிஐ) அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் பணம் பரிமாற்றிக்கொள்ளப்படும் முறையை எளிமைப்படுத்தியது. விரிவான வங்கித் தகவல்களைப் பகிர வேண்டிய அவசியமின்றி, ஒரு மெய்நிகர் பரிவர்த்தனை முகவரி மூலம் எந்தவொரு வங்கிக் கணக்கையும் மற்றொரு வங்கிக் கணக்குடன் இணைக்க யுபிஐ வழிவகை செய்கிறது.
யுபிஐ-ன் சிறப்பம்சம் அதன் எளிமையில் உள்ளது. மனப்பாடம் செய்ய வேண்டிய வங்கிக் கணக்கு எண்கள் எதுவும் இதில் இல்லை. இது வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் போன்ற சிக்கலான உள்ளீடுகளுக்குப் பதிலாக எளிமையான ஒரு முறையில் இயங்குகிறது. உடனடிப் பரிமாற்றங்களைத் தொடங்க பயனர்களுக்கு ஒரு மொபைல் எண், ஒரு யுபிஐ ஐடி மற்றும் பாதுகாப்பு அங்கீகாரம் மட்டுமே தேவைப்படுகிறது. பரிவர்த்தனைகள் நிகழ்நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 24 மணிநேரமும் இந்த சேவை கிடைக்கிறது. மேலும் பல்வேறு வங்கிகள் மற்றும் செயலிகளுக்கு இடையே தடையின்றி இயங்கக்கூடிய அம்சத்தையும் இம்முறைக் கொண்டுள்ளது.
எளிய முறையில் இயங்கக்கூடிய இந்தத் தன்மையே யுபிஐ-ன் விரைவான விரிவாக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது. 2021-ல் 216 வங்கிகளிலிருந்து, ஜனவரி 2026-க்குள் 691 வங்கிகளாக உயர்ந்துள்ள இந்த நெட்வொர்க் ஒரு ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற உள்கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. இது பயனர்கள் சிரமமின்றி பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவுகிறது. இம்முறையின் குறைந்த செலவு கட்டமைப்பு தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கான தடைகளை குறைத்துள்ளது. அதே நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே புத்தாக்கத்தை ஊக்குவித்துள்ளது.
யுபிஐ வளர்ச்சியடைந்த நிலையில், அதன் தாக்கம் பணம் செலுத்துதலின் எளிமையையும் தாண்டி விரிவடைந்தது. நிதிக்கட்டமைப்பில் தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோரின் பங்கேற்பை இது மறுசீரமைக்கத் தொடங்கியது. டிஜிட்டல் பரிமாற்றங்கள் மிகவும் எளிதாகவும், நம்பகமானதாகவும் மாறியதுடன், பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் வருமானக் குழுக்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யுபிஐ பரிமாற்றங்கள்: எண்ணிக்கை, வேகம் மற்றும் உலகளாவிய தலைமை
- ஜனவரி 2026-ல் மட்டும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள்-2,170 கோடி (21.70 லட்சம்)
- ஜனவரி 2026-ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு – ரூ. 28.33 லட்சம் கோடி
- இந்தியாவின் டிஜிட்டல் சில்லறை பரிவர்த்தனைகளில் யுபிஐ-ன் பங்கு - 81%
- உலகளாவிய நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்கு - 49%
- யுபிஐ: உலகின் மிகப்பெரிய நிகழ்நேரப் பணப்பரிமாற்ற அமைப்பு (சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பீட்டின்படி)
- உலகளவில் முன்னணியில் உள்ள பணப்பரிமாற்றச் சூழல் அமைப்பை உருவாக்க எடுத்துக்கொண்ட காலம் - 10 ஆண்டுகளுக்கும் குறைவாக.
வசதிக்கும் அப்பால்: நிதி சேவைகள் அணுகலை விரிவுபடுத்துதல்
யுபிஐ என்பது பணம் செலுத்துவதை எளிதாக்குவதைத் தாண்டி, நிதிக் கட்டமைப்பில் மக்களின் பங்களிப்பை மறுசீரமைப்பதாக உள்ளது. உடனடி மற்றும் குறைந்த செலவிலான பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கியதன் மூலம், இது ரொக்கப் பணத்தைச் சார்ந்திருப்பதை குறைத்து, செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்களுக்கு முறையான நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்கியுள்ளது. சிறு வணிகர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு, இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது; இது கடன், காப்பீடு மற்றும் சேமிப்பிற்கான புதிய வழிகளை உருவாக்குகிறது.
இதன் உண்மையான வெற்றி என்பது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் மட்டும் அல்ல. யார் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதில் பிரதிபலிக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் க்யூஆர் குறியீடுகள் மூலம் பணத்தைப் பெறுகிறார்கள். கிராமப்புற மண்டிகளில் பரிவர்த்தனைகள் எளிதாக மேற்கொள்ளப்படுகின்றன. தெருவோர வியாபாரிகள் சில்லறைத் தட்டுப்பாட்டால் சிரமப்படுவதில்லை. வீட்டுப் பணியாளர் ஒரு சாதாரண ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி சில நொடிகளில் மாநிலங்களுக்கு அப்பால் பணம் அனுப்ப முடிகிறது. இந்த அமைப்பில், நகர்ப்புறம், கிராமப்புறம்; முறையான, முறைசாரா துறை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி படிப்படியாக குறைந்து வருகிறது. இது நிதி உள்ளடக்கத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது.
அதே நேரத்தில், யுபிஐ ஒரு விரிவான நிதிசார் தளமாக உருவெடுத்து வருகிறது. 'யுபிஐ லைட்' விரைவான, குறைந்த மதிப்புள்ள பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில் 'யுபிஐ ஆட்டோபே' வசதி மின்சாரக் கட்டணம் மற்றும் மாத சந்தாக்கள் செலுத்துவது போன்றவற்றை எளிதாக்குகிறது. ' யுபிஐ-யில் கடன்' வசதி, முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்புகளை அணுக வழிவகை செய்வதன் மூலம் மக்களை சென்றடைதலை மேலும் விரிவுபடுத்துகிறது. இந்த உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன. திருப்பிச் செலுத்துதலை எளிதாக்குகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் முறையான நிதிச் சேவைகள் விரிவடைகின்றன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்: அணுகல், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துதல்
விரிவடைந்து வரும் இந்த சூழல் அமைப்பின் அடிப்படையில், யுபிஐ இப்போது நாட்டின் அன்றாட பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு அங்கமாகிவிட்டது. வசதிக்கான ஒரு கருவியாகத் தொடங்கியது, இன்று தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நம்பகமான அமைப்பாக பரிணமித்துள்ளது.
பயனர்களைப் பொறுத்தவரை, இந்த அனுபவம் எளிமை மற்றும் நம்பிக்கையைக் குறிப்பதாகும். பல வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு செயலி மூலம் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர வேண்டிய அவசியமில்லை. மேலும் இந்த முறையின் பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்பாக பணம் செலுத்துவதை உறுதி செய்கின்றன. செயலிகளுக்குள் உள்ள உதவிக்கான அம்சங்கள் குறைகளைத் தீர்ப்பதை மேலும் எளிதாக்குகின்றன. இதனால் முதல்முறை பயனாளர்களுக்கும் இந்த அமைப்பு எளிதாக உள்ளது.
இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான மேம்பட்ட அங்கீகார முறைகளை ஏப்ரல் 1, 2026 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. 'இரு-படிநிலையில் அங்கீகாரம்' என்பது ஒவ்வொரு பரிவர்த்தனையும் கடவுச்சொற்கள், பயோமெட்ரிக்ஸ் அல்லது பாதுகாப்பான டோக்கன்களுடன் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்களையும் சேர்த்து பல அடுக்குகளின் மூலம் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்கிறது. இது மோசடி அபாயங்களை கணிசமாகக் குறைப்பதோடு, டிஜிட்டல் தளங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
வணிகர்களுக்கு, ரொக்கத்தைக் கையாளாமல் பணத்தைப் பெறுவதற்கான வேகமான மற்றும் திறமையான வழியை இது வழங்குகிறது. வங்கி அட்டைகள் அல்லது ரொக்கத்தை விட மொபைல் மூலம் பணம் செலுத்துவதை விரும்புவோர் உட்பட பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய இது வணிகங்களுக்கு உதவுகிறது. சிறிய கடைகள், தெருச்சந்தைகள் அல்லது ஆன்லைன் தளங்கள் என எதுவாக இருந்தாலும், பரிவர்த்தனைகளை உடனடியாக செய்ய முடிகிறது. இது கால தாமதங்களைக் குறைப்பதோடு ரொக்க மேலாண்மை அல்லது திரும்பப் பெறுதல் போன்ற செயல்பாட்டு சவால்களையும் குறைக்கிறது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, பாதுகாப்பான, நிகழ்நேர பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த, ஏற்கனவே உள்ள அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இது சேவை வழங்கலை மேம்படுத்துகிறது. வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை பராமரிக்கும் அதே வேளையில், பெரிய அளவிலான தனிநபர் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளை இவை ஆதரிக்கின்றன. இதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதோடு முறையான நிதிச் சேவைகளுக்கான அணுகலையும் விரிவுபடுத்துகின்றன.
இந்தியாவின் புத்தாக்கம்: உலகளாவிய தாக்கத்தை உருவாக்குதல்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சூழல் அமைப்பு உள்நாட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, உலகளவில் ஒரு முன்மாதிரியாகவும் உருவெடுத்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் அதன் அளவு, செயல்திறன் மற்றும் உள்ளடக்கிய தன்மையை அங்கீகரித்துள்ளன.
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், யுபிஐ மூலம் இந்தியாவில் மாதந்தோறும் 2,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். இது வேறு எந்த நிகழ்நேர பணப்பரிமாற்ற அமைப்பிலும் இல்லாத ஒரு சாதனை அளவாகும்.
தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் யுபிஐ விரிவடைந்துள்ளதுடன், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரிஷியஸ், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளின் பணப்பரிவர்த்தனை அமைப்புகளுடன் செயல்பாட்டில் உள்ளது அல்லது இணைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் சர்வதேச தடம், எல்லை கடந்த பரிவர்த்தனைகளை எளிதாக்கி வெளிநாட்டுப் பண வரவுகளை ஆதரிக்கிறது. மேலும், நிதி உள்ளடக்கத்திற்கு பங்களித்து உலகளாவிய நிதித் தொழில்நுட்ப சூழலில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.
யுபிஐ: இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகளுக்கான ஒரு வரப்பிரசாதம்
நிதிச் சேவைகளைப் பெறுபவர்களுக்கும், நிதி அமைப்பிற்கு வெளியே இருந்தவர்களுக்கும் இடையிலான இடைவெளியை யுபிஐ தகர்த்துள்ளது. இந்தியாவின் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகள் தற்போது பெருநகரங்களைப் போலவே வேகமாகவும் எளிமையாகவும் பரிவர்த்தனை செய்கின்றன.
ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்ட ஒரு உள்நாட்டு அமைப்பு, இப்போது உலகையே வழிநடத்துகிறது. வங்கிக் கணக்கு இல்லாதவர்களை சென்றடையும் முயற்சியாகத் தொடங்கியது, இன்று நிகழ்நேரப் பணப்பரிமாற்றத்திற்கான உலகளாவிய தரநிலையாக மாறியுள்ளது. வரிசை முறையிலிருந்து க்யூஆர் குறியீடுகள் வரையிலான, இந்தியாவின் பயணம், உள்ளடக்கிய புத்தாக்கத்தின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
யுபிஐ என்பது வெறும் பணப்பரிமாற்ற அமைப்பு மட்டுமல்ல; இது ஒரு மக்கள் தளம். இது நிதிப் பரிமாற்றங்களை வேகமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றியுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், பணப்பரிமாற்ற முறையை மட்டுமல்லாமல், இந்தியா முன்னேறும் முறையையும் இது மாற்றியமைத்துள்ளது.
***
SS/PD
(Features ID: 158472)
आगंतुक पटल : 33
Provide suggestions / comments